புதிய மின்மோட்டார் பம்பு செட்டு வாங்க விவசாயிகளுக்கு ரூ.10,000 மானியம் - தமிழக அரசு
மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10,000 மானியமாக வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெற வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உழவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு கடந்த இரு ஆண்டுகளாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கு புதிதாக நீர் ஆதாரங்களை உருவாக்குதல், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வேளாண் பம்ப் செட்டுகளுக்கு புதிதாக இலவச மின் இணைப்பு.
25 லட்சத்துக்கும் அதிகமான வேளாண் பம்ப்செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.5,157 கோடி நிதி ஒதுக்கீடு, மின் இணைப்பு இல்லாத விவசாயிகளுக்கு சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப் செட்டுகளுக்கு மானியம், பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு, நுண்ணீர்ப் பாசன அமைப்புக்கு மானியம் போன்று பல்வேறு வகைகளில் இந்த அரசு உதவி வருகிறது.
மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட்டுகள்: நடப்பு 2022-23 வேளாண் நிதிநிலை அறிக்கையில், ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்புசெட்டுகள் பொருத்தவும் ஒரு மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10,000 வீதம் 5,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
திட்டத்தின் நோக்கம்: பழைய, திறன்குறைந்த மின் மோட்டார் பம்புசெட்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், மின்சாரப் பயன்பாடு அதிகமாவதோடு, பாசன நேரமும் அதிகரிக்கிறது. சாகுபடிக்கான செலவு அதிகரித்துவரும் வேளையில், சிறு, குறு விவசாயிகள் இத்தகைய பழைய திறன் குறைந்த பம்பு செட்டுகளை மாற்றுவதற்கு தயங்குகிறார்கள். இத்தகைய விவசாயிகளின் நலனுக்காக, புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகளை வாங்குவதற்கு மானியம் வேளாண்மைப் பொறியியல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.
திட்ட விபரம்: பழைய பம்புசெட்டை மாற்றி, புதிய மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிணறுக்கு புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கும் இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மானியம் எவ்வளவு? வேளாண் பொறியியல் துறையின் அனுமதி பெற்று, முழுவிலையில் புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்கும் விவசாயிகளுக்கு ரூ.10,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
மானியம் பெறுவதற்கான தகுதி:
ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள், தங்களது பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்ற விரும்பினாலும், புதிதாக ஆழ்துளைக் கிணறு அல்லது
குழாய்க் கிணறு அல்லது திறந்தவெளி கிணறு அமைத்து, சொந்தமாக மின் இணைப்பு பெற்ற விவசாயிகளும், இத்திட்டத்தில் பயன்பெறலாம். நடப்பாண்டில் 5,000 சிறு குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக அரசு ரூ.5 கோடி ஒதுக்கி உள்ளது இதில் 1,000 பம்பு செட்டுகளுக்கான மானியம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு அங்கீகரித்துள்ள நிறுவன மாடல்களிலிருந்து, தங்களுக்கு விருப்பமான மின்மோட்டாரை நான்கு ஸ்டாருக்கு குறையாமல், விவசாயிகள் தேர்வுசெய்து கொள்ளலாம்.
எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்? - இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ, https://mis.aed.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பித்து, தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு உங்கள் வட்டார வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலர்களை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
மானியம் பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்கள்: ஆதார் அட்டை, சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ், புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதி திராவிட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவராயிருப்பின் சாதிச் சான்றிதழ், சிட்டா, கிணறு விபரத்துடன் கூடிய அடங்கல், மின் இணைப்பு (Service Connection) சான்றிதழ், புதிய மின்மோட்டார் வாங்கியதற்கான விலைப்பட்டியல் போன்ற ஆவணங்களுடன் உழவன் செயலி மூலமாக அல்லது இணையதளம் மூலமாக விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
பாசன வசதியை மேம்படுத்துவதில், சிறு, குறு விவசாயிகளின் நிதிச்சுமையினை வெகுவாகக் குறைக்கும் நோக்கத்தில், தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10,000 மானியமாக வழங்கும் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும்" என்று வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.