சென்னையில் இருந்து கேரளாவுக்கு கடத்திய ரூ.14¾ கோடி சிக்கியது


சென்னையில் இருந்து கேரளாவுக்கு கடத்திய ரூ.14¾ கோடி சிக்கியது
x

சென்னையில் இருந்து கேரளாவுக்கு கடத்திய ரூ.14¾ கோடி பள்ளிகொண்டா அருகே சிக்கியது. காரில் இருந்து, லாரிக்கு மாற்றியபோது பிடிபட்ட 4 பேரை கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்

சென்னையில் இருந்து கேரளாவுக்கு கடத்திய ரூ.14¾ கோடி பள்ளிகொண்டா அருகே சிக்கியது. காரில் இருந்து, லாரிக்கு மாற்றியபோது பிடிபட்ட 4 பேரை கைதுசெய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டுக்கட்டாக பணம்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீஸ்காரர் பிரேம் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் பள்ளிகொண்டாவை அடுத்த சின்ன கோவிந்தம்பாடி தேசிய நெடுஞ்சாலை ஓரம் ஒதுக்குப்புறமான இடத்தில் நான்கு பேர் காரில் இருந்து சந்தேகப்படும் வகையில் கருப்பு நிறத்தில் கொண்ட பண்டல்களை அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரிக்கு மாற்றிக் கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதற்கு அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக போலீசாரை மிரட்டும் வகையில் பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியில் ஏறி சோதனையிட்டனர். அப்போது லாரியின் கேபின் மேல் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட பண்டல்கள் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது பண்டல்களில் 2000, 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

கேரளாவுக்கு கடத்தல்

உடனடியாக இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் கருணாகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் இது சம்பந்தமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் விரைந்து சென்று 4 பேரையும் பள்ளிகொண்டா போலீஸ்நிலையத்துக்கு அழைத்து சென்றார். லாரியும், காரும், பணக்கட்டுகளுடன் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது.

அங்கு பிடிபட்ட 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர்கள் சென்னை பிராட்வே மண்ணடியில் இருந்து கேரளாவுக்கு பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தனர். இங்கு லாரியில் மாற்றப்படும் பணக்கட்டுகள் கோவை அருகே குறிப்பிட்ட ஓர் இடத்தில் வைத்து வேறு வாகனத்துக்கு மாற்றி எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

ரூ.14¾ கோடி

பிடிபட்ட பணம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள 4 பணம் எண்ணும் எந்திரங்கள் மூலம் நேற்று காலை 10 மணி முதல் எண்ணப்பட்டது. 48 பண்டல்களில் இருந்த பணத்தை எண்ணும் பணி சுமார் 7 மணி நேரமாக நடந்தது. ஒவ்வொரு ரூபாய் நோட்டுகளில் உள்ள வரிசை எண்களை பதிவு செய்து பிறகு பணத்தை போலீசார் ஒவ்வொரு கட்டாக கட்டி வைத்தனர். மொத்தம் ரூ.14 கோடியே 77 லட்சத்து 86 ஆயிரம் இருந்தது.

பிடிபட்ட 4 பேரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் கோழிக்கோடு வல்லக்காடு மலைகிராமத்தைச் சேர்ந்த ஹம்சா என்பவரது மகன் நாசர் (வயது 42), மதுரை அங்காடிமங்கலம் பள்ளிவாசல் தெரு முகமது ரபிக் ராஜா என்பவரது மகன் வாசிம்அக்ரம் (19), சென்னை பிராட்வே சாலை விநாயகர் கோவில் தெரு முகைதீன்கலி என்பவரது மகன் நிசார் அகமது (33), கோழிக்கோடு கியாகோத் வல்லங்காடு பாரோ தொடுகை மில் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த முகமது என்பவர் மகன் சர்புதீன் (37) என்பது தெரியவந்தது.

4 பேர் கைது

இவர்கள் 4 பேரிடமும் சுமார் 7 மணி நேரமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் குற்றப்பிரிவு போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். இந்த பணம் யாரிடமிருந்து எடுத்துச்செல்லப்படுகிறது, கேரளாவில் யாருக்கு பணத்தை எடுத்து செல்கிறீர்கள், எதாவது ஒரு இயக்கத்துக்கு கொண்டு செல்கிறீர்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் எந்தவித பதிலும் கூறவில்லை. அதைத்தொடர்ந்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்து 4 பேரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் சென்னை வருமான வரித்துறை துணை இயக்குனர் ராஜமனோகர் மற்றும் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு வந்து இவ்வளவு பணம் இவர்களுக்கு எப்படி கிடைத்தது? என பிடிபட்ட 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story