2 பேரிடம் ரூ.17¼ லட்சம் அபேஸ்


2 பேரிடம் ரூ.17¼ லட்சம் அபேஸ்
x
தினத்தந்தி 26 Aug 2022 7:00 PM GMT (Updated: 26 Aug 2022 7:00 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிதி நிறுவன ஊழியர் உள்பட 2 பேரிடம் நூதன முறையில் ரூ.17¼ லட்சம் அபேஸ் செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிதி நிறுவன ஊழியர் உள்பட 2 பேரிடம் நூதன முறையில் ரூ.17¼ லட்சம் அபேஸ் செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தனியார் நிறுவன ஊழியர்

ஓசூர் நவதி லிங்க் ரோட்டைச் சேர்ந்தவர் சாரதி (வயது 34). தனியார் நிறுவன ஊழியர். இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதை நம்பி சாரதி அதில் கொடுக்கப்பட்டு இருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அதில் பேசிய நபர் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறினார். இதை நம்பிய சாரதி, அந்த நபர் கூறிய லிங்க் மூலமாக ரூ.9 லட்சத்து 17 ஆயிரம் முதலீடு செய்தார்.

இதன் பிறகு அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதன்பிறகுதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாரதி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

நிதி நிறுவன ஊழியர்

ஊத்தங்கரை அருகே சி.முடுக்கன்தாள் கிராமத்தைச் சேர்ந்த சிவசந்திரன் (33). தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மொபைல் போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் வீட்டில் இருந்த படியே தினமும் ரூ.3 ஆயிரம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அதில் குறிப்பிட்டிருந்த எண்ணை சிவசங்கரன் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதில் முனையில் பேசிய நபர் தனது பெயர் சுதன்சிங் என்றும், தான் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்குமாறு கூறினார்.

அதை நம்பி சிவசந்திரன் அவர் கொடுத்த வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சத்து 6 ஆயிரத்து 460 அனுப்பி வைத்தார். இதன் பிறகு சுதன்சிங்கின் செல்போன் எண்ணில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. மேலும் அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிவசந்திரன் இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

இந்த 2 புகார்கள் குறித்தும் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story