விபத்தில் பெற்றோரை இழந்தவர்களுக்கு ரூ.19½ லட்சம் கல்வி உதவித்தொகை
விபத்தில் பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.19½ லட்சம் கல்வி உதவித்தொகைக்கான ஆணையை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
கல்வி வளர்ச்சி
விபத்தில் பெற்றோரை இழந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் கல்வி உதவித்தொகை வைப்பு நிதிக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் அஸ்தம்பட்டியில் நடைபெற்றது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வைப்பு நிதிக்கான ஆணைகள் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அதன்படி விபத்தில் பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகளுக்கு நிதிஉதவி வழங்கி வருகிறார். குறிப்பாக ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சிக்குட்பட்ட அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைக்கான வைப்பு ஆணைகள் வழங்கப்படுகிறது.
முதிர்வுத்தொகை
அதன்படி தற்போது 27 பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பாதுகாவலரிடம் மொத்தம் ரூ.19½ லட்சத்திற்கான வைப்பு நிதிக்கான ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த வைப்பு நிதி மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
அவர்களுக்கு 18 வயது பூர்த்தியடைந்த பின் வட்டியுடன் கூடிய முதிர்வுத்தொகையை அவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துணை மேயர் சாரதாதேவி, முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.