ஒரே மாதத்தில் ரூ.2 ஆயிரம் குறைந்தது; சில்லரை விற்பனை பாதிப்பால் மஞ்சள் விலை வீழ்ச்சி


ஒரே மாதத்தில் ரூ.2 ஆயிரம் குறைந்தது; சில்லரை விற்பனை பாதிப்பால் மஞ்சள் விலை வீழ்ச்சி
x

சில்லரை விற்பனை பாதிக்கப்பட்டதால் ஒரே மாதத்தில் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்து மஞ்சள் விலை வீழ்ச்சி அடைந்தது.

ஈரோடு

சில்லரை விற்பனை பாதிக்கப்பட்டதால் ஒரே மாதத்தில் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்து மஞ்சள் விலை வீழ்ச்சி அடைந்தது.

மஞ்சள் மார்க்கெட்

ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், ஈரோடு, கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஆகிய 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஏலத்துக்கு ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக மஞ்சள் கொண்டு வரப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் மஞ்சள் வரத்து ஏற்படுகிறது.

மஞ்சள் விலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உயராமல் இருந்து வந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். கடந்த ஜூலை மாதம் 15-ந் தேதியில் இருந்து குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்தை கடந்து மஞ்சள் விற்பனையானது. அதன்பிறகு மஞ்சளின் விலை தொடர்ந்து உயர்ந்தது. ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரத்து 300-ஐ கடந்து மஞ்சள் விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மீண்டும் விலை குறைய தொடங்கியது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே மஞ்சளின் விலை ரூ.14 ஆயிரத்துக்குள் விற்பனையாகி வருகிறது. எனவே கடந்த ஒரே மாதத்தில் சுமார் ரூ.2 ஆயிரம் வரை விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது.

சில்லரை விற்பனை

இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:-

சில்லரை விற்பனையை பொறுத்துதான் மஞ்சளின் விலை அமைகிறது. சில்லரை விற்பனை பாதிக்கப்பட்டதால், கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. அதேபோல் பழைய மஞ்சள் அதிகமாக விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. 10 சதவீதம் மட்டுமே தரமான மஞ்சள் வருகிறது. ஆன்லைன் வர்த்தகமும் மந்தமாக காணப்படுகிறது.

மஞ்சளின் வரத்தும் கடந்த சில நாட்களாக குறைவாக வருகிறது. தரம் மாறுபடுவதால் ஒவ்வொரு மார்க்கெட்டுக்கும் இடையிலான அதிகபட்ச விலையில் அதிக வித்தியாசம் ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story