ரூ.20 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
குன்னூரில் ரூ.20 கோடி ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
குன்னூர்
குன்னூரில் ரூ.20 கோடி ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஆக்கிரமிப்பு நிலம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான சில இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அந்த நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஆக்கிரமிப்பு செய்தவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் குன்னூர் டென்ட்ஹில் அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தை ஜின்ஜோஸ் என்பவர் ஆக்கிரமித்து தேயிலை பயிரிட்டு இருப்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
கடும் நடவடிக்ைக
அதன்பேரில் அங்கு அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை பயிரிட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கலெக்டர் அம்ரித் உத்தரவின்பேரில் குன்னூர் தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் அந்த நிலத்தை மீட்டனர். மேலும் அங்கு தடுப்புகள் வைத்து அறிவிப்பு செய்யப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், டென்ட்ஹில் பகுதியில் அரசுக்கு சொந்தமான 1.60 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. அந்த நிலம் தற்போது மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.20 கோடி ஆகும். அரசு நிலங்களை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என்றனர்.