சமையல் கியாஸ் விலை ரூ.200 குறைப்புமக்கள் சுமை குறைப்பா? தேர்தல் எதிர்பார்ப்பா?பொதுமக்கள் கருத்து


சமையல் கியாஸ் விலை ரூ.200 குறைப்புமக்கள் சுமை குறைப்பா? தேர்தல் எதிர்பார்ப்பா?பொதுமக்கள் கருத்து
x

சமையல் கியாஸ் விலை ரூ.200 குறைப்பு மக்கள் சுமை குறைப்பா? தேர்தல் எதிர்பார்ப்பா? பொதுமக்கள் கருத்து தொிவித்துள்ளனா்

ஈரோடு

சமையல் கியாஸ் என்பது ஒரு நேரத்தில் வசதியானவர்கள் சமையலறைகளில் மட்டுமே இருந்து வந்தது. மத்திய, மாநில அரசுகளின் இலவச கியாஸ் இணைப்பு திட்டத்தின் விளைவாக ஏழைகளின் சமையலறைக்கும் அது இப்போது வந்துவிட்டது. கியாஸ் இல்லாமல் சமையலறைகள் இல்லை என்ற இலக்கை நோக்கி இன்றைக்கு நாம் நகர்ந்து வருகிறோம்.

அரசு மானியம்

முன்பு எல்லாம் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மத்திய அரசு கணிசமாக மானியத் தொகை வழங்கியதால் வெறும் ரூ.50, ரூ100 விலைக்குகூட சிலிண்டர் வாங்கிய காலம் உண்டு.

நாள் போக்கில் அந்த மானியத் தொகை குறைக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு அனைவரும் சிலிண்டரை முழுத் தொகை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும், அவரவர் வங்கிக் கணக்கில் மானியத் தொகை வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அனைவரும் முழுத்தொகை கொடுத்து வாங்கும் மனநிலைக்கு வந்துவிட்டவுடன் மானியத்தை வங்கிகளில் செலுத்துவதை கொஞ்சம், கொஞ்சமாக அரசு நிறுத்திவிட்டது. இதனால் ரூ.1000-க்கு மேல் சிலிண்டரை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு அனைவரும் தள்ளப்பட்டனர்.

விலை நிர்ணயம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி அடிப்படையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் விலை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியாகிறது.

அதேபோல், ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் நாள் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.

வரவேற்பு

அந்த வகையில், கடந்த 1-ந்தேதி வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.92.50 குறைக்கப்பட்டு ரூ.1,852.50-க்கு விற்பனை செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. ஆனால் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 1,118 விலையில் விற்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு மாதம் பிறக்கும் போதும் வீட்டு சமையல் சிலிண்டர் விலை அதிகரித்துவிடுமோ? என்று இல்லத்தரசிகளுக்கு ஒருவித அச்சம் மேலோங்க இருந்து வந்தனர். இந்தநிலையில், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பரிசாக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்களின் சுமையை குறைக்கும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை இல்லத்தரசிகள் மனதார வரவேற்று உள்ளனர்.

குற்றச்சாட்டு

இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலும் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

எனவே இந்த திடீர் விலை குறைப்பு மக்களின் மாதாந்திர பட்ஜெட் சுமையை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதா? அல்லது எதிர்வரும் தேர்தலை மனதில்கொண்டு அறிவிக்கப்பட்டதா? என்பது குறித்து பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்து வருமாறு:-

மகிழ்ச்சி

ஈரோடு வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்த இல்லத்தரசி ருக்குமணி:-

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. ரூ.50 வீதம் பலமுறை ஏற்றப்பட்டு கடைசியாக ரூ.1,137-க்கு விற்பனை செய்யப்பட்டது. சிலிண்டர் வினியோகம் செய்பவர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை சேர்த்து ரூ.1,180 வரை செலுத்த வேண்டிய நிலை இருந்தது. நாங்கள் 2 மாதங்களுக்கு ஒரு சிலிண்டர் வாங்கி வருகிறோம். பல மாதங்களுக்கு பிறகு ரூ.200 குறைக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்து இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1,000-ஐ விட குறைந்துவிட்டது. ஆனால் விலையை இன்னும் குறைக்க வேண்டும்.

இன்னும் குறைக்க வேண்டும்

ஈரோடு சோலார் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி தேன்மொழி:-

கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது எதிர்பாராத விஷயமாக உள்ளது. இந்த விைல குைறப்பு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி என்றே சொல்ல முடியும். அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த விலை குறைக்கப்பட்டு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

எது எப்படியோ, தேர்தலை முன்னிட்டாவது விலையை இன்னும் குறைக்க முன்வர வேண்டும். அப்போதுதான் கூலி வேலை செய்பவர்கள் முதல் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் ஓரளவுக்கு பாதுகாக்கப்படும். அதேசமயம் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர உள்ளவர்கள் மீண்டும் விலையை அதிகரித்து விடக்கூடாது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

தடுமாற்றம்

ஈரோடு நாச்சியப்பா வீதி பூக்கடை வியாபாரி செல்வி:-

பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியில் கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், விலை இன்னும் குறைக்கப்பட வேண்டும். நாங்கள் 45 நாட்களுக்கு ஒருமுறை கியாஸ் சிலிண்டர் வாங்குகிறோம். இன்றைய நிலவரப்படி விலைவாசி உயர்வு விண்ணை தொடும் வகையில் உள்ளது. கியாஸ் சிலிண்டர் அத்தியாவசியமான பொருட்களில் ஒன்றாகும். வீட்டு வாடகை, கல்வி கட்டணம், மின் கட்டணம், மளிகை பொருட்கள் என்ற வரிசையில் கியாஸ் சிலிண்டருக்கும் சம்பளத்தில் ஒரு தொகையை அவசியம் ஒதுக்கியாக வேண்டும். தற்போதைய பொருளாதார நிலையில் கியாஸ் சிலிண்டர் வாங்குவதற்கே தடுமாற்றம் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் ரூ.200 விலையை குறைத்து இருப்பது சற்று ஆறுதலாகதான் இருக்கிறது.

அரசியல் நாடகம்

ஈரோடு சூளை எல்.வி.ஆர். காலனியை சேர்ந்த இல்லத்தரசி சண்முகப்பிரியா:-

கியாஸ் சிலிண்டருக்கு பல ஆண்டுகளாக மானியம் முறையாக வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு வங்கி கணக்கில் மானியம் வழங்கப்படுவதாக கூறி கியாஸ் சிலிண்டர் விலையை ஒரே அடியாக ஏற்றிவிட்டனர். ஆனால் கடைசியாக ஒரு சிலிண்டருக்கு ரூ.40 மட்டுமே மானியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுபோன்ற யுக்தியில்தான் நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்து, கியாஸ் சிலிண்டருக்கு ரூ.200 விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது மகிழ்ச்சியாக தெரிந்தாலும், இதற்கு ஈடாக ரூ.400 விலையை ஏற்றினாலும் ஏற்றி விடுவார்கள். எனவே அரசியல் நாடகத்தால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். கடந்த பல நாட்களாக பெட்ரோல், டீசல் விலையும் மாற்றமில்லாமல் உள்ளது. அதையும் குறைத்தால் மக்கள் பயன் அடைவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story