குறுவை நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்

குறுவை நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.குறுவை நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குறுவை நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.குறுவை நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:-
குத்தாலம் கல்யாணம் (முன்னாள் எம்.எல்.ஏ.):- பெரும்பாலான விவசாயிகள் பம்பு செட்டு மூலம் நீர் இறைத்துதான் விவசாயப்பணியினை மேற்கொள்கின்றனர். மின்மாற்றியில் அடிக்கடி ஏற்படும் பழுதின் காரணமாக நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்படுகிறது. என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க சாத்தியம் உள்ளதாக நிபுணர் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. எனவே அதற்கு தேவையான ரூ.124 கோடியை அரசே ஒதுக்கீடு செய்ய உரிய பரிந்துரைகளை அனுப்ப வேண்டும்.
நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம்
அன்பழகன் (தலைவர், டெல்டா பாசன விவசாயிகள் சங்கம்):- தமிழக அரசு குறுவை நெல்லுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. ஆனால் வெளிமாநிலங்களில் ஊக்கத்தொகையுடன் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உற்பத்தி செலவை கணக்கிடும் போது விலைகுறைவாக உள்ளது. தமிழகத்திலும் குறுவை நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
கோவி.நடராஜன்:- சீர்காழி கழுமலையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். விளைநிலங்களை பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேந்திரன்:- தெற்குராஜன் வாய்க்கால், குமுக்கிமண்ணியாற்றில் இதுவரை தண்ணீர் வந்தபாடில்லை காவிரிநீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிவாரணம்
ராமமூர்த்தி:- வேளாண் விரிவாக்க மையங்களில் சம்பா, தாளடிக்கு தேவையான அனைத்து ரக நெல் விதைகளும் இருப்பு இல்லை. நீண்டகால நெல் ரகங்கள் மட்டுமே உள்ளது. குறுகிய கால நெல் விதை ரகங்களை வழங்க வேண்டும்.
துரைராஜ் (தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்):- கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட தரங்கம்பாடி தாலுகாவை சேர்ந்த 8 கிராமங்களுக்கு நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.
சீனிவாசன்:- வருவாய்த்துறையில் விவசாயிகள், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு ரசீது வழங்க வேண்டும்.
முருகன்:- கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணியாற்றும் கிராமங்களுக்கு சரியாக வருவதில்லை. சிட்டா அடங்கல் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்கள் பெறுவதற்கு அவர்களை தேடி அலைய வேண்டிய சூழல் இருந்து வருகிறது.
கொள்முதல் நிலையங்கள்
பாண்டுரங்கன்:- எடக்குடி, மங்கைநல்லூர் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். சேவை மையங்களில் கம்ப்யூட்டர் சிட்டா எடுப்பதற்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க வேண்டும்.
கூட்டத்தில் வேளாண் இணை இயக்குனர் சேகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் திருப்பதி, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் தயாள விநாயகம்அமல்ராஜ் மற்றும் அதிகாரிகள் விவசாயிகள் கலந்துகொண்டனர்.






