மளிகை கடையில் ரூ.50 ஆயிரம், 5 அரிசி மூட்டைகள் திருட்டு


மளிகை கடையில் ரூ.50 ஆயிரம், 5 அரிசி மூட்டைகள் திருட்டு
x
தினத்தந்தி 6 Feb 2023 1:38 AM IST (Updated: 6 Feb 2023 1:39 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் அருகே மளிகை கடையில் ரூ.50 ஆயிரம், 5 அரிசி மூட்டைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். மேலும் கோவில் பூட்டை உடைக்க முடியாததால் உண்டியல் தப்பியது.

திருச்சி

மளிகை கடையில் திருட்டு

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கலிங்கமுடையான்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மெய்யம்பட்டி கிராமத்தில் மளிகை கடை மற்றும் டீக்கடை வியாபாரம் செய்து வருபவர் கண்ணன். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து தனது கடையை பூட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று காலை அப்பகுதியில் சென்ற மக்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடப்பதைக் கண்டு கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது கடையில் வைத்திருந்த ரூ.50,000 மற்றும் தலா 25 கிலோ எடையுள்ள 5 அரிசி மூட்டைகள் திருட்டு போனது தெரியவந்தது.

கோவில் உண்டியல் தப்பியது

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் நள்ளிரவில் செல்வதும், பின்னர் அவர்கள் திரும்பி வருவதும் பதிவாகியுள்ளது. அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் அங்குள்ள கிரில் கேட்டின் பூட்டை உடைக்க முடியாமல் திரும்பி சென்று விட்டனர். இதனால் கோவிலின் உண்டியல் தப்பியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story