1,000 புதிய பஸ்கள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு -தமிழக அரசு உத்தரவு
1,000 புதிய பஸ்கள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கடந்த மார்ச் மாதம் சட்டசபையில், ரூ.500 கோடியில் 1,000 புதிய பஸ்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும், 500 பழைய பஸ்கள் புதுப்பிக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதத்தில் அரசுக்கு போக்குவரத்துத் துறை தலைவர் கடிதம் எழுதினார்.
அதில், பஸ் கொள்முதல் செய்வதை பொருத்தவரை, ஒரு புறநகர் பஸ் கொள்முதலுக்கு ரூ.41.20 லட்சம், ஒரு விரைவு பஸ் கொள்முதலுக்கு ரூ.58.50 லட்சம் செலவாகும். அந்த வகையில் 200 விரைவு பஸ்களுக்கு ரூ.117 கோடியும், விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்துக்கான 190 பஸ்களுக்கு ரூ.78 கோடியும், கோவை போக்குவரத்துக் கழகத்துக்கான 163 பஸ்களுக்கு ரூ.67 கோடியும், கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்துக்கான 155 பஸ்களுக்கு ரூ.63 கோடியும், மதுரை போக்குவரத்துக் கழகத்துக்கான 163 பஸ்களுக்கு ரூ.67 கோடியும், திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்துக்கான 129 பஸ்களுக்கு ரூ.53 கோடியும் என மொத்தம் ரூ.446 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
புதுப்பிக்கும் பணி
சென்னை மாநகரம், மதுரை, கோவை போக்குவரத்துக் கழகங்களின் பழைய பஸ்களை புதுப்பிக்கும் வகையில் நகர பஸ் ஒன்றுக்கு ரூ.15.75 லட்சமும், புறநகர் பஸ் ஒன்றுக்கு ரூ.15.20 லட்சமும், மலைப்பிரதேச பஸ் ஒன்றுக்கு ரூ.14.44 லட்சமும் தேவை.
அந்த வகையில், மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கான 85 பஸ்களுக்கு ரூ.13 கோடியும், கோவை போக்குவரத்துக் கழகத்துக்கான 226 பஸ்களுக்கு ரூ.34 கோடியும், மதுரை போக்குவரத்துக் கழகத்துக்கான 189 பஸ்களுக்கு ரூ.28 கோடியும் என மொத்தம் ரூ.76 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
ரூ.500 கோடி ஒதுக்கீடு
அந்த கோரிக்கையை அரசு கவனமாக பரிசீலித்தது. 1,000 புதிய பி.எஸ். 6 டீசல் பஸ்களை வாங்க ரூ.446.60 கோடியும், 500 பழைய பஸ்களை புதுப்பிக்க ரூ.53.40 கோடியும் என மொத்தம் ரூ.500 கோடி ஒதுக்கி அரசு உத்தரவிடுகிறது.
பஸ் கொள்முதலுக்கான டெண்டர் பணிகளை சாலை போக்குவரத்து நிறுவனம் கண்காணிக்க வேண்டும். மத்திய மோட்டார் வாகன சட்டம், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் ஆகியவற்றுக்கு ஏற்ப கொள்முதல் செய்ய வேண்டும் என்று சாலை போக்குவரத்து நிறுவன இயக்குனருக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.