2,718 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6½ கோடி உதவித்தொகை
மாதம் தலா ரூ.2 ஆயிரம் வீதம் 2,718 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6½ கோடி உதவித்தொகை வழங்கப்படுகிறது என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
மாதம் தலா ரூ.2 ஆயிரம் வீதம் 2,718 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6½ கோடி உதவித்தொகை வழங்கப்படுகிறது என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மனவளர்ச்சி குன்றியோர்
மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி அவர்களின் மனதில் தன்னம்பிக்கையை வளர செய்து சமுதாயத்தில் சமவாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்ற வகையில் நல்ல பல சீரிய திட்டங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022 - 2023-ம் நிதியாண்டிற்கு 2,816 மன வளர்ச்சி குன்றியோர் 40 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உள்ள மாற்றுத்திறனாளிகளில் 2 ஆயிரத்து 184 நபர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 5 கோடியே 24 லட்சத்து 16 ஆயிரம் பராமரிப்பு உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு உதவி தொகை
6 ஆயிரத்து 614 கை, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளில் மிகவும் கடுமையாக 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பாதிக்கப்பட்ட 380 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ.91 லட்சத்து 20 ஆயிரம் பராமரிப்பு உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
57 தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளில் 45 நபர்களுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் ரூ. 10 லட்சத்து 80 ஆயிரம் பராமரிப்பு உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.105 தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளில் 89 நபர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ.21 லட்சத்து 36 ஆயிரம் பராமரிப்பு உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
முதுகு தண்டுவடம் பாதிப்பு
29 முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், தண்டுவட மரப்பு நோய் மாற்றுத்திறனாளிகளில் 20 நபர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 4 லட்சத்து 80 ஆயிரம் பராமரிப்பு உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது, மாவட்டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்து 718 பயனாளிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.6 கோடியே 52 லட்சத்து 32 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
சிறு, குறு, நடுத்தரமான மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிந்து பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கு வங்கி கடன் மானியமாக 88 நபர்களுக்கு ரூ.21 லட்சத்து 5 ஆயிரத்து 836 வழங்கப்பட்டுள்ளது.
18 வயதிற்கு மேற்பட்ட பார்வைதிறன் மற்றும் செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போன் வழங்கும் திட்டத்தின்கீழ் 2022 -2023-ம் நிதியாண்டிற்கு 480 பார்வைதிறன் குறைபாடுடைய 9 மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற்று பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.