சாலைகளை தரம் உயர்த்த ரூ.80 கோடி அனுமதி


சாலைகளை தரம் உயர்த்த ரூ.80 கோடி அனுமதி
x

சாலைகளை தரம் உயர்த்த ரூ.80 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

அமைச்சர் அறிவிப்பு

தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக சட்டசபையில் 27.8.2021 அன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 10 ஆயிரம் கி.மீ. நீள சாலைகள் தெரிவு செய்யப்பட்டு, மாவட்ட இதர சாலைகளாக படிப்படியாக தரம் உயர்த்தப்படும். முதற்கட்டமாக 2 ஆயிரம் கி.மீ. நீளச் சாலைகள் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

நிர்வாக ஒப்புதல்

இந்த அறிவிப்பு குறித்து அரசுக்கு நெடுஞ்சாலைத் துறை தலைமை என்ஜினீயர் (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்) கடிதம் எழுதி, 2 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள 873 ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை ரூ.2,178 கோடி செலவில் மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்துவதற்கு நிர்வாக ஒப்புதல் வேண்டும் என்று கடிதம் எழுதினார்.

அவரது கருத்துருவை ஏற்று, அதற்கான நிர்வாக அனுமதியை அளித்து அரசு உத்தரவிடுகிறது.

அரியலூர் மாவட்டம்

அதன்படி அரியலூர் மாவட்டத்தில் குன்னம் தொகுதியில் இலைக்கடம்பூர் கேட் முதல் ஆர்.எஸ்.மாத்தூர் சாலை 5.600 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரம் உயர்த்த ரூ.645 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரியலூர் தொகுதியில் பொய்யூர்-செம்மந்தங்குடி சாலை 3.150 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரம் உயர்த்த ரூ.521 லட்சமும், ஜெயங்கொண்டம் தொகுதியில் ஆலத்திபள்ளம் முதல் ஒடப்பேரி சொக்கலிங்கபுரம் சாலை 2½ கிலோ மீட்டர் தூரத்திற்கு தரம் உயர்த்த ரூ.202 லட்சமும், ஆண்டிமடம்-தேவனூர்-வாரியங்காவல் சாலை முதல் குவாகம் 4.200 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரம் உயர்த்த ரூ.541 லட்சமும், மருதூர்-நாகல்குழி சாலை 2.550 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.340 லட்சமும், பூவானிபட்டு கீழ் நெடுவாய் சாலை 4.200 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரம் உயர்த்த ரூ.524.50 லட்சமும், டி.வி.சாலை கீழமிக்கேல்பட்டி-நாயகனைப்பிரியாள் சாலை 4.600 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரம் உயர்த்த ரூ.464 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 26.800 கிலோ மீட்டர் தூர சாலை பணிகளுக்கு ரூ.32 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ெபரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் பாண்டகபாடி-பிம்பலூர் சாலை 4.410 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரம் உயர்த்த ரூ.690.26 லட்சமும், பொம்மனபாடி-குரூர் சாலை 1.500 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரம் உயர்த்த ரூ.241.83 லட்சமும், வெங்கனூர் நீலன் வீடு முதல் சமுத்திரத்தம்மன் கோவில் சாலை 2.400 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரம் உயர்த்த ரூ.437.54 லட்சமும், மரவநத்தம்-மேட்டுப்பாளையம் சாலை 4.730 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.674.54 லட்சமும், கிருஷ்ணாபுரம்-அன்னமங்கலம் சாலை முதல் ஜெய்சங்கர் கிரஷர் சாலை வரை 1.200 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரம் உயர்த்த ரூ.241.69 லட்சமும், விஜயபுரம்-பெரியசாமி கோவில் சாலை வரை 5.400 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரம் உயர்த்த ரூ.577.93 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் தொகுதியில் வீரமநல்லூர் ஓ.எச்.டி. முதல் குழுமூர் சாலை வரை 1.870 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரம் உயர்த்த ரூ.267.58 லட்சமும், சிலோன் காலனி முதல் மங்களமேடு சாலை முதல் கே.புதூர் சாலை வரை 0.170 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரம் உயர்த்த 23.90 லட்சமும், கீழப்பெரம்பலூர்-கோழியூர் பாதை சாலை 3.200 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரம் உயர்த்த ரூ.553.83 லட்சமும், பரவாய்-நன்னை சாலை 3.500 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரம் உயர்த்த ரூ.653.75 லட்சமும், பீல்வாடி முதல் ஆற்காட்டு சாலை வரை 2.320 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரம் உயர்த்த ரூ.289.10 லட்சமும், கீழ உசேன் நகரம்-மேல உசேன் நகரம் சாலை 1.050 கிலோ மீட்டர் தூரத்திற்கு 145.37 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 31.750 கிலோ மீட்டர் தூர சாலையை ரூ.47 கோடியே 97 லட்சத்து 32 ஆயிரம்அனுமதிக்கப்பட்டுள்ளது.


Next Story