மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடந்ததா?


மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடந்ததா?
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடந்ததாக தகவல் பரவியது. இதனால் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்புத்தூர்


கோவை மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடந்ததாக தகவல் பரவியது. இதனால் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி பள்ளி

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி தொடக்க பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சாகா பயிற்சி மேற்கொண்டதாக தகவல் பரவியது. மேலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த பலர் பள்ளி வளாகத்தில் வரிசையாக நின்று உறுதி மொழி எடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று மதியம் மாநில பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாநகராட்சி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பயிற்சி பெற அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. போராட்டத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

தூய்மை பணி

இதுகுறித்து மாநில பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பயிற்சி மேற்கொள்ள மாநகராட்சி பள்ளி மைதானத்தை பயன்படுத்தியது கண்டிக்கத்தக்கது. இதற்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஆண்டுதோறும் சேவா தினத்தை கடைபிடித்து வருகின்றனர். அன்றைய தினம் ஆர்.எஸ்.எஸ். சார்பில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதன்படி மாநகராட்சி தொடக்க பள்ளி உள்பட கோவையில் 23 இடங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு நிகழ்ச்சி தொடங்கும்போதும், முடியும்போதும் நாங்கள் உறுதிமொழி எடுப்பது வழக்கம். இதனை சில அமைப்பினர் வேண்டும் என்றே திரித்து தவறான தகவல் பரப்பி உள்ளனர் என்றனர்.

விசாரணைக்கு உத்தரவு

இந்த சம்பவம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறுகையில், மாநகராட்சி பள்ளி வளாகத்தில் பயிற்சி மேற்கொள்ள எந்த அமைப்புக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாநகராட்சி முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணை முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

1 More update

Next Story