3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி: ஐகோர்ட்டில் அரசு விளக்கம்


3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி: ஐகோர்ட்டில் அரசு விளக்கம்
x

உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் 3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தை அக்டோபர் 2-ந்தேதி நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி தமிழ்நாடு போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ததால் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காட்டி போலீசார் அனுமதி வழங்கவில்லை.

இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ''நவம்பர் 6-ந்தேதி ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்தார். கடந்த திங்கட்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

அனுமதி மறுப்பு

இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு மற்றும் டி.ஜி.பி. தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, ''தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் 24 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க மறுக்கப்பட்டுள்ளது. 23 இடங்களில் உள் அரங்கில் கூட்டம் நடத்தலாம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டும் அணிவகுப்பு ஊர்வலம் அல்லது உள்அரங்கில் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும்'' என்று கூறி அறிக்கையை தாக்கல் செய்தனர்.

ஏற்க முடியாது

ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் ஜி.ராஜகோபாலன், எஸ்.பிரபாகரன், என்.எல்.ராஜா, வக்கீல் ரபுமனோகர் உள்ளிட்டோர், ''தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழும்போது, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு மட்டும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை அரசு காரணம் காட்டுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 500 இடங்களில் அனுமதி வழங்கியபோது, ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு மட்டும் கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி என 3 இடங்களில் அனுமதியளிப்பது என்பது ஏற்க முடியாது. உளவுத்துறை அறிக்கையைக் காரணம் காட்டி அரசு தப்பிக்க நினைக்கிறது. எனவே, 50 இடங்களிலும் அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும். அல்லது கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வாதிட்டனர்.

அரசியல் கூடாது

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, 24 இடங்களில் போலீஸ் ஏன் அனுமதி வழங்கவில்லை? என கேள்வி எழுப்பினார். அதற்கு மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, ''ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்குப்பிறகு தமிழ்நாட்டில் வேறு மாதிரியான சூழல் நிலவுகிறது. அதை கருத்தில் கொண்டே 3 இடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக போலீசாரும், வருவாய்த்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி போன்றவை மனித சங்கிலி நடத்தவே அனுமதி கோரியது. அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரவில்லை. இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது'' என்று விளக்கம் அளித்தார்.

பாதுகாப்பு முக்கியம்

போலீஸ் அறிக்கைகளை படித்து பார்த்த நீதிபதி, கோவையைத் தவிர்த்து மற்ற இடங்களில் ஊர்வலம் செல்ல அனுமதிக்கலாமே என்றார். இதற்கு பதில் அளித்த மூத்த வக்கீல், ''மக்களின் பாதுகாப்பே பிரதானமானது. தற்போது ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளின் வீடுகளுக்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உயிரை துச்சமாக நினைத்து பணியாற்றும் உளவுத்துறையினரின் அறிக்கையை புறம் தள்ளிவிட முடியாது'' என்று கூறினார்.

மனுதாரர்கள் தரப்பில், உள்ளரங்கு கூட்டமாக நடத்த முடியாது. அமைதியான முறையில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தவே அனுமதி கேட்டுள்ளோம் என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதி, உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்து எஞ்சிய 47 இடங்களில் அனுமதி வழங்குவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து வருகிற வெள்ளிக்கிழமை (நாளை) உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.


Next Story