பவானிசாகர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ரப்பர் தொழிற்சாலைக்கு சீல்; அதிகாரிகள் நடவடிக்கை
பவானிசாகர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ரப்பர் தொழிற்சாலைக்கு சீல்; அதிகாரிகள் நடவடிக்கை
பவானிசாகர்
பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் அண்ணாநகர் பகுதியில் வனப்பகுதியையொட்டி அனுமதியின்றி ரப்பர் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருவதாகவும், அதில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அருகில் உள்ள கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் கலப்பதாகவும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். மேலும் அனுமதியின்றி செயல்படும் இந்த ரப்பர் தொழிற்சாலையில் நிலத்தடி நீர் மாசுபட்டு விவசாயம் பாதிக்கப்படுவதால் தொழிற்சாலையை மூடக்கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் ஆலையை திடீரென முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ரப்பர் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் அந்த ரப்பர் தொழிற்சாலை இயங்கியதாக கூறி ஆலையை அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதுகுறித்த தகவல் கிடைத்தும் வருவாய்த்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய துறை அதிகாரிகள் தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரப்பர் தொழிற்சாலை எந்தவித அனுமதியும் பெறாதது தெரியவந்தது. இதையடுத்து ரப்பர் தொழிற்சாலையை மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.