சிதிலமடைந்த பார்வை மாடம்
கோவை வாலாங்குளக்கரையில் பயன்பாட்டுக்கு வந்த சில மாதங்களில் பார்வை மாடம் சிதிலமடைந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
கோவை
கோவை வாலாங்குளக்கரையில் பயன்பாட்டுக்கு வந்த சில மாதங்களில் பார்வை மாடம் சிதிலமடைந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், முத்தண்ணன்குளம் உள்பட ஏராளமான குளங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதில் வாலாங்குளம் 3 பிரிவாக இருப்பதால், அங்கு ரூ.75 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டு குளத்தை புனரமைத்து அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அத்துடன் இங்கு படகு சவாரியும் விரைவில் தொடங்கப்பட உள்ளதால், அதற்காக டிக்கெட் வாங்க விற்பனை நிலையமும் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் குளத்தின் நடுப்பகுதியில் சென்று அதன் அழகை ரசிக்க மிதவை நடைபாதையும் குளத்துக்குள் அமைக்கப்பட்டு உள்ளது.
பார்வை மாடம் உடைந்தது
அதுபோன்று அங்கு வித்தியாசமான இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டு இருப்பதுடன், மாடம் போன்று அமைத்து அதன் மீது அமர்ந்து குளத்தின் அழகை ரசிக்கவும் வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும் அங்கு அழகிய வடிவில் நடைபாதையும், ஆங்காங்கே கண்டெய்னர் போன்று அமைத்து அதில் அமர்ந்து குளத்தின் அழகை பார்த்து ரசிக்க பார்வைமாடம் வசதி உள்ளது. இவை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து சில மாதங்கள்தான் ஆகிறது. ஆனால் அதற்குள் கண்டெய்னர் போன்று அமைக்கப்பட்டு உள்ள மாடம் உடைந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
குளத்துக்குள் விழ வாய்ப்பு
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
பல கோடி ரூபாய் செலவு செய்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் செய்யப்பட்ட பணிகள் சில மாதங்களுக்குள்ளேயே உடைந்து இருப்பதை பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த குளத்தில் செய்யப்பட்ட அனைத்து பணிகளும் முழுமையாக இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதற்குள்ளேயே அந்த பார்வைமாடம் உடைந்து இருப்பதை ஏற்க முடியாது. இது குளத்தின் மிக அருகில் இருக்கிறது. தெரியாமல் குழந்தைகள் யாராவது அதன் மீது சென்றால் தவறி குளத்துக்குள் விழக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செய்து உள்ள பணிகளை எந்த நிறுவனம் செய்ததோ அதுதான் 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும் என்று விதிமுறை இருப்பதால், உடைந்த இடத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.