புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரவிய வதந்தி துளியும் உண்மை இல்லை - பீகார் அதிகாரிகள் குழு பேட்டி


புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரவிய வதந்தி துளியும் உண்மை இல்லை - பீகார் அதிகாரிகள் குழு பேட்டி
x

புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரவிய வதந்தி துளியும் உண்மை இல்லை என்று பீகார் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.

திருப்பூர்,

தமிழகம் முழுவதும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக கடந்த ஒரு வாரமாக வதந்தி பரவி வருகிறது. வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியருடன் பீகார் அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தினர். பீகாரில் இருந்த வந்த 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழு மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆலோசனைக்கு பிறகு பீகார் அதிகாரிகள் குழு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வீடியோ குறித்து விசாரணை நடத்தினோம். புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை தடுப்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. அதிகாரிகள் மட்டுமின்றி, தொழில்துறை சார்ந்த சங்கங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினோம்.

தமிழக அரசின் நடவடிக்கையால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கின்றன. புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரவிய வதந்தி துளியும் உண்மை இல்லை, வதந்திகளை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பிலும், தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் உடனடி உரிய நடவடிக்கை எடுத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு பீகார் அரசு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story