இளம்பெண்ணுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
திருப்பூர் மாநகராட்சி சாமுண்டிநகர் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்-ராஜேஸ்வரி தம்பதி. இவர்களுடைய மகள் இருதயலட்சுமி (வயது 28). இவர் மூளை காசநோயால் பாதிக்கப்பட்டு உடல் செயல் இழந்து கடந்த 8 ஆண்டுகளாக பேச முடியாமல், நடக்க முடியாமல் இருந்து வருகிறார். இதனால் அவரின் பெற்றோர் தமிழக முதல்-அமைச்சரிடம் உதவி செய்ய கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி, நேற்று ரங்கநாதபுரத்தில் உள்ள இருதயலட்சுமி வீட்டுக்கு சென்று தொடர் சிகிச்சை மேற்கொள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சமூக பங்களிப்பு நிதியாக ரூ.5 லட்சம் வழங்கினார்கள். இதற்கான காசோலையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல், சங்கத்தின் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், இணை செயலாளர் குமார் துரைசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறும்போது, 'இருதயலட்சுமி வெகுவிரைவில் பூரண குணமடைந்து, அவரின் லட்சியமான விஞ்ஞானியாக வேண்டும் என்கிற கனவு நிறைவேற வாழ்த்துக்கள்' என்றார்.