பத்திர பதிவுத்துறை அதிகாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்


பத்திர பதிவுத்துறை அதிகாரிகளுக்கு  ரூ.1 லட்சம் அபராதம்
x

உரிய காரணமின்றி பதிவு செய்ய மறுத்த பத்திர பதிவுத்துறை அதிகாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

திருவாரூர்


உரிய காரணமின்றி பதிவு செய்ய மறுத்த பத்திர பதிவுத்துறை அதிகாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

பத்திர பதிவு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மருதங்காவெளி தோப்பை சேர்ந்தவர் இந்திராணி. இவர் தனக்கு சொந்தமான புஞ்சை நிலத்தை தனது மகன் சக்திவேல் பெயருக்கு உரிய முத்திரை தாளில் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதி தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி கொடுத்தார். பின்னர் அதை பதிவு செய்ய பதிவு உள்ளிட்ட கட்டண தொகை செலுத்தி இணையதளம் மூலம் முத்துப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுக்கு தாக்கல் செய்தார்.இதைத்தொடா்ந்து தாயும், மகனும் பதிவுக்காக முத்துப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது இந்த சொத்து தொடர்பாக முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் உள்ளதாகவும், விசாரணை முடியும்வரை முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்திர பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தெரிவித்துள்ளதாகவும் கூறி பதிவு செய்ய மறுத்தனர்.

நோட்டீஸ்

இதைத்தொடர்ந்து சக்திவேல் தரப்பில் வக்கீல் மூலம் முத்துப்பேட்டை சார் பதிவாளர், நாகப்பட்டினம் மாவட்ட பதிவாளர் மற்றும் பத்திர பதிவுத்துறை தலைவர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதற்கு முத்துப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகம் சார்பில் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ந் தேதி முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கடிதத்தின் அடிப்படையிலேயே ஆவணம் பதிவு செய்வதை மறுத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.

வழக்கு

இதைத்தொடர்ந்து சேவை குறைபாடு செய்ததாக கூறி சக்திவேல் தரப்பில் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் லட்சுமணன், பாக்கியலட்சுமி அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு கூறியது.

சேவை குைறபாடு

இந்த தீர்ப்பில் முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்துள்ள கடிதத்துக்கு எந்தவித சட்டப்படியான அங்கீகாரமும் இல்லை. சிவில் சம்பந்தமான புகார்களை போலீஸ் நிலையத்தில் எடுக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டி இருந்தும் அதை மதிக்காமல் முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை முடியும் வரை பத்திர பதிவு செய்யக்கூடாது என்று கூறியிருப்பதை எந்த சட்டப்படியும் ஏற்க இயலாது.பத்திர பதிவு சட்டத்தின்படி நடந்து கொள்ளாமல் ஆவணத்தை திருப்பி அனுப்பி உள்ளதை இந்த ஆணையம் சேவை குறைபாடாக கருதுகிறது. மேலும் மாவட்ட பதிவாளர் மற்றும் பதிவுத்துறை தலைவரின் கீழ் சார் பதிவாளர் பணியாற்றி வருவதாலும் புகார்தாரர் தரப்பில் அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீசுக்கு எந்தவித பதிலும் மாவட்ட பதிவாளரும், பதிவுத்துறை தலைவரும் அளிக்கவில்லை என்பதாலும் இதை சேவை குறைபாடாக இந்த ஆணையம் கருதுகிறது.

ரூ.1 லட்சம் இழப்பீடு

எனவே மாவட்ட பதிவாளர், பதிவுத்துறை தலைவர், சார் பதிவாளர் ஆகியோரின் செயல் அனைத்தும் புகார்தாரருக்கு மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்த ஆணையம் கருதுகிறது. எனவே புகார்தாரருக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்.இந்த ெதாகையை மாவட்ட பதிவாளர், சார்பதிவாளர், பதிவுத்துறை தலைவர் வழங்க வேண்டும். மேலும் தான செட்டில்மெண்ட் பத்திரத்தை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 6 வாரத்துக்குள் பதிவு செய்து தர வேண்டும். மேலும் வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என அந்த தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story