குழாய்கள் உடைப்பு; மின்மோட்டார் பழுது: திருநகரில் 30 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி

திருநகரில் குடிநீர் குழாய் உடைப்பு, மின்மோட்டர் பழுதால் கடந்த 30 நாட்களுக்கு மேலாக குடிநீர் சீராக வழங்கப்படாத நிலை இருந்து வருகிறது. அதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்
திருநகரில் குடிநீர் குழாய் உடைப்பு, மின்மோட்டர் பழுதால் கடந்த 30 நாட்களுக்கு மேலாக குடிநீர் சீராக வழங்கப்படாத நிலை இருந்து வருகிறது. அதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வைகை கூட்டுக்குடிநீர்
மதுரை மாநகராட்சி 94-வது வார்டாக திருநகர் அமைந்து உள்ளது. சுமார் 25 ஆயிரம் பேர் வசிக்கக்கூடிய இந்த பகுதி மக்களுக்கு வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் சோழவந்தான் முள்ளிப்பள்ளம் வைகை படுகையில் அமைக்கப்பட்ட கிணறுகளில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு மேலக்காலில் உள்ள ராட்சத மேல்நிலை நீர்த்தொட்டியில் சேமிக்கப்படுகிறது.
அதன்பிறகு அதில் இருந்து பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்கள் வழியாக அண்ணா பூங்காவில் உள்ள மேல்நிலை நீர்தொட்டியில் தண்ணீர் சேமித்து அதை தெருக்குழாய்கள் மூலமாக பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் முள்ளிப்பள்ளம் வைகை படுகையில் இருந்து வழியோர 17 கிராமங்களுக்கு தேவையை பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் திருநகர் பகுதிக்கு தண்ணீர் வரும்போது பற்றாக்குறையாகவே வருகிறது.
இந்த நிலையில் திருச்சியில் இருந்து காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாக தனக்கன்குளம் ஆசிரியர் காலனி மொட்டமலை பகுதியில் அமைந்துள்ள 9 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தொட்டியில் தண்ணீர் சேமிக்கப்பட்டு தெருக்களில் உள்ள குழாய்கள் வழியாக ஒருநாள் விட்டு ஒருநாள் பொதுமக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
குழாய்கள் உடைப்பு
இந்த நிலையில் அம்ருத் திட்டத்தின் கீழ் முல்லை பெரியாறு குடிநீர் வினியோகத்திற்காக திருநகர் பகுதி முழுவதுமாக பூமிக்கடியில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் தோண்டிய, பள்ளங்களை முறையாக மூடாமல் மேடு பள்ளமாக விட்டு சென்று வருகிறார்கள்.
அதன் வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தட்டுத்தடுமாறி கீழே விழுந்து காயமுற்று செல்கின்றனர். மேலும் தற்போது காவிரி குடிநீர் வினியோகத்தில் உள்ள குழாய்கள் சேதமாகி திருநகர் 6-வது பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி ரோட்டில் ஓடுகிறது. இதனால் தண்ணீர் வினியோகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 நாட்களுக்கு மேலாக, சில தெருவை சேர்ந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மோட்டார் பழுது
இந்த நிலையில் காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகிக்கக்கூடிய 2-ல் ஒரு மின் மோட்டார் பழுதாகி விட்டதால் 9 லட்சம் லிட்டருக்கு பதிலாக 5 லட்சம் லிட்டராக குறைந்து தண்ணீர் வரத்துள்ளது. மேலும் வைகை கூட்டுக் குடிநீர் தண்ணீர் வரத்து பகுதியான திருநகர் முதல் திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோவில் வரை மெயின்ரோட்டில் பல இடங்களில் குழாய் சேதமடைந்து தண்ணீர் கசிந்து வீணாகி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






