ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் போராட்டம்
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
முசிறியில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர்கள் 2-வது நாளாக சிறுவிடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சித் துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலங்கடந்த ஆய்வுகள், விடுமுறை தின இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ்-அப் காணொலி ஆய்வுகள் அனைத்தையும் முற்றிலுமாக கைவிட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட இயக்குனர்கள் அனைவருக்கும் 2017-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியம் வழங்கி, பணிவரன் முறை செய்ய வேண்டும். மக்கள் நலன்களையும், நிர்வாக நலன்களையும் கருத்தில் கொண்டு பெரிய ஊராட்சிகளை பிரித்து அதிகபட்சமாக 25 ஊராட்சிகளை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஊழியர்கள் 22 பேர் 2-வது நாளாக சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடியது. மேலும் ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் மொத்த பணியாளர்கள் 41 பேரில் 4 பேர் மருத்துவ விடுப்பிலும், ஒருவர் பயிற்சிக்கும் சென்றுள்ளார். மீதமுள்ள 14 பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக சிறுவிடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்கள் உள்பட அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக இந்த போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று 27 அலுவலர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.