ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பெருந்திரள் முறையீட்டு போராட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பெருந்திரள் முறையீட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் பெருந்திரள் முறையீட்டு போராட்டம் நடத்தினர். இதில் மாவட்ட தலைவர் ஜாகீர் உசேன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பெருந்திரள் முறையீட்டு போராட்டத்தில் வளர்ச்சித்துறை ஊழியர்களை மனநோயாளியாக மாற்றும் உதவி திட்ட அலுவலரின் தினசரி ஆய்வு கூட்டத்தை கைவிட வேண்டும், மாவட்ட நிலை அலுவலர்களால் நடத்தப்படும் ஆய்வு கூட்டங்கள் இரவு நேரங்களிலும் தொடருதல், தேவையற்ற கூகுள் ஆய்வு கூட்டங்களை கைவிட வேண்டும், உதவியாளர் நிலையில் பணியிட மாறுதல்களை உடனடியாக வழங்க வேண்டும், மற்றும் பதவி உயர்வுகளை காலதாமதமின்றி வழங்க வேண்டும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சிப்பிரிவில் நிலுவையில் இருக்கும் குற்றச்சாட்டு குறிப்பாணைகள் மீது விரைந்து இறுதி உத்தரவு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. பின்னர் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர். இந்த போராட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.