ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
தொடர் உள்ளிருப்பு போராட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஊராட்சி அலுவலகங்களில் நேற்று தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வசந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளர் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மாற்றுபணியில் உள்ளவர்களை உரிய இடத்தில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும். முழு சுகாதார திட்டத்தில் பணிபுரியும் மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மற்ற மாவட்டங்களில் உள்ளது போல் உயர்த்தப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும்.
19 அம்ச கோரிக்கைகள்
கணினி உதவியாளர்களை கலந்தாய்வு மூலம் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் பணிபுரிய உரிய உத்தரவுகள் வழங்கவேண்டும். இரவு நேர ஆய்வு கூட்டங்கள் உள்ளிட்ட ஆய்வு கூட்டங்களை மாதத்திற்கு ஒருமுறை நடத்த வேண்டும். ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 19 அம்ச கோரிக்ககைகளை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடந்தது.
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றப்படாத பட்சத்தில் 2-ம் கட்டமாக வருகிற 8-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம், 3-ம் கட்டமாக 20-ந்தேதி தமிழ்நாடு முதல்-அமைச்சரிடம் பெருந்திரள் முறையீடு செய்யும் போராட்டம் நடக்கிறது. போராட்டத்தில் மாநில செயலாளர் ஜம்ரூத்நிஷா, இணைசெயலாளர் அமர்நாத், வட்டத்தலைவர் சிவனேசன், வட்ட செயலாளர் ஆனந்த், பொருளாளர் கண்ணன் உள்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வலங்கைமான்
இதேபோல் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் சங்கத்தின் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் ராஜசேகர், வட்டத்தலைவர் பிரபு, வட்டார செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய அலுவலக ஆணையர்கள், ஒன்றிய அலுவலக அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் அலுவலகத்தில் தினமும் நடைபெறும் மத்திய, மாநில அரசு திட்டப்பணிகளுக்கான செயல்பாடுகள், கணினி பணிகள் முற்றிலுமாக முடங்கியது.
மன்னார்குடி
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி ஒன்றியக்குழு அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள், அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் இலரா தலைமை தாங்கினார். இதில் கிளை செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் தமிழரசன், மாவட்ட துணைத்தலைவர்கள் மோகன், பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 48 மணி நேர உள்ளிருப்பு போராட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று மேற்கொண்டனர். நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் நேரு, ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தால் ஒன்றிய அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.
குடவாசல்
குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிட வாசலில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சிவக்குமார், ராஜாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்
சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர்.