ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலகங்கள் வெறிச்சோடியது.

புதுக்கோட்டை

விடுப்பு எடுத்து போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள் காலங்கடந்த ஆய்வுகள், விடுமுறை தின, இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ்-அப், காணொலி ஆய்வுகள் அனைத்தையும் கைவிட வேண்டும்.

ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், விடுபட்ட உரிமைகளான மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குதல் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நவம்பர் 23, 24-ந் தேதிகளில் சிறு விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலுவலகம் வெறிச்சோடியது

இதையொட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிடவற்றில் சங்கத்தை சேர்ந்த அலுவலர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்கள் பணிக்கு வராததால் இருக்கைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

போராட்டம் குறித்து சங்க மாவட்ட செயலாளர் பிரான்சிஸ் கூறுகையில், ''மாவட்டத்தில் 500 ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து நாளையும் (அதாவது இன்று) விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 14-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்'' என்றார். இந்த போராட்டத்தினால் அலுவலக பணிகள் பாதிப்படைந்தன.


Next Story