ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்
பொள்ளாச்சியில் காலி பணியிடங்களை நிரப்ப கோரி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
பொள்ளாச்சி
ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், தேர்வுநிலை, சிறப்பு நிலை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும், ஊராட்சி செயலாளர்களுக்கும் வழங்க வேண்டும்ம், சட்டமன்ற அறிவிப்பின்படி பணி விதிகளை உடனடியாக வெளியிட வேண்டும், வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து நிறைவேற்றிட பெருகி வரும் மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஒன்றியங்களை பிரிக்க வேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி தெற்கில் 21 பேரும், வடக்கில் 29 பேரும், ஆனைமலையில் 11 பேரும், சுல்தான்பேட்டையில் 11 பேரும், கிணத்துக்கடவில் 21 பேரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் ஊராட்சி செயலாளர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டதால் கிராம ஊராட்சிகளில் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.