ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்
தஞ்சை புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2-வது தளத்தில் தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று மாடிப்படி அருகே உள்ள இடத்தில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கை.கோவிந்தராஜன், பொருளாளர் தேசிங்கு, நிர்வாகிகள் ஆண்டனி, இளையராஜா, பொறியாளர் சங்க தலைவர் கார்த்திகேயன், ஓவர்சீயர்ஸ் சங்க தலைவர் திருமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஊழியர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். தொடர்ந்து வாராந்திர கூட்டம், கூகுள்மீட் கூட்டம் நடத்துவதற்கு அதிருப்தியை தெரிவிப்பது. ஊராட்சி ஒன்றியத்தில் பணிகளை மேற்கொள்ள இணையம் மூலமாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட வேண்டும் என ஆணையிட்டுள்ளதால் தகுதியான ஒப்பந்தக்காரர்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே திட்டப்பணிகள் செயலாக்கத்திற்கு நியாயமான கால அவகாசம் வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் பணியிட மாறுதல் கோரிக்கைகளை பரிசீலனை செய்து பணியிட மாறுதல் வழங்கவேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அர சு ஊழியர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.