தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்


தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 13 Sep 2023 6:45 PM GMT (Updated: 13 Sep 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் புதன்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அலுவலங்கள் வெறிச்சோடி கிடந்தன.

கோரிக்கை

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள அனைத்து நிலையிலான காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், தேர்வுநிலை, சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்க வேண்டும், சட்டமன்ற அறிவிப்பின்படி பணி விதிகளை உடனடியாக வெளியிட வேண்டும், அனைத்து நிலை பதவி உயர்வுகளையும் உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

வேலை நிறுத்தம்

நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் 550 பணியாளர்களில் சுமார் 300 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஓட்டப்பிடாரத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் அன்புசெல்வன் தலைமையில் அலுவலர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த அலுவலகம் வெறிச்சோடியது. பணியாளர்களின் வேலைநிறுத்தத்தில் பெரும்பாலான யூனியன் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் யூனியன் அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.


Next Story