கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம்; தபால் சேவை பாதிப்பு

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தால் தபால் சேவை பாதிக்கப்பட்டது.
அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
8 மணி நேர வேலை, ஓய்வூதியம், சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைப்படி பணப்பலத்துடன் கூடிய மூன்று கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். பணியின்போது இறந்த ஜிடிஎஸ் ஊழியர்களின் வாரிசுகளுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.
கிளை அஞ்சலகங்களுக்கு மடிக்கணினி, பிரிண்டர், இணையதள சேவை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் திருச்சி கோட்டம் சார்பில் நேற்று ஒருநாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
தபால் சேவை பாதிப்பு
திருச்சி மாநகரில் தலைமை தபால் நிலையம் உள்பட பல்வேறு அஞ்சல் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களும், திருச்சி புறநகர் பகுதிகளில் உள்ள அஞ்சல் நிலையங்களில் பணியாற்றும் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் கிராமப்புறங்களில் நேற்று பொதுமக்களுக்கு வழங்கப்பட இருந்த தபால்கள், மணியாடர்கள் உள்ளிட்ட அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.