கருணாநிதி நினைவு சின்னத்துக்காக மக்கள் பணத்தை வீணாக்குவது தான் திராவிட மாடலா?ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கேள்வி
கருணாநிதி நினைவு சின்னத்துக்காக மக்கள் பணத்தை வீணாக்குவது தான் திராவிட மாடலா? என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
திருப்பரங்குன்றம்,
கருணாநிதி நினைவு சின்னத்துக்காக மக்கள் பணத்தை வீணாக்குவது தான் திராவிட மாடலா? என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
பொதுக்கூட்டம்
திருப்பரங்குன்றத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் .ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஜபார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மே தினம் கொண்டாட தகுதி இல்லை
சட்டமன்றத்தில், 12 மணி நேரம் வேலை என்று திராவிட சித்தாந்தத்தையே குழி தோண்டி புதைக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் செய்தார்.இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 2 கோடி தொழிலாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டங்களை நடத்தினார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான குற்றச்சாட்டுக்கு ஆளானார். தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்தார். தி.மு.க. கூட்டணி கட்சிகளும் கூட எதிர்ப்பை தெரிவித்தனர். தி.மு.க. தொழிற்சங்கம் கூட இதனை எதிர்த்தன. ஆகவே மு.க.ஸ்டாலினுக்கு மே தினத்தை கொண்டாட எந்த தகுதியும் இல்லை என்பது நிரூபணமாகி உள்ளது. மே தினத்தைக் கொண்டாட கூடிய ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். தொழிலாளர்களுக்காக குரல் எழுப்பி வருகிறார்.
திராவிட மாடலா ?
தமிழகத்தில் 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஆனால் வருகின்ற செப்டம்பர் 15-ந் தேதி குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால் இதில் பல்வேறு காரணங்களை கூறி, வெறும் 59 லட்சம் பேருக்கு தான் வழங்குவார்கள், கேட்டால் நிதி காரணத்தை கூறுவார்கள்.
ஆனால் கடற்கரையில் ரூ.80 கோடியில் பேனா சிலை வைப்பது, ரூ.114 கோடியில் மதுரையில் நூலகம் அமைப்பது, கருணாநிதிக்கு மணிமண்டபம் அமைப்பது இப்படி கருணாநிதி நினைவு சின்னத்துக்காக மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவது தான் திராவிட மாடலா ?
சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவும் எடப்பாடி பழனிசாமியும் பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தினார்கள். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கும் 110 விதியின் கீழ் திட்டங்கள் ஒன்றுகூட மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
சட்டமன்றத்திற்கு தேர்தல் வரும்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது.நிச்சயம் இந்த தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜெயலலிதாவின் ஆட்சி மலரும். இவ்வாறு அவர் கூறினார்.