காடாம்புலியூரில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் கலெக்டரிடம் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மனு
காடாம்புலியூரில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என கலெக்டரிடம் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மனு அளித்துள்ளார்.
நெய்வேலி,
நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் தனது தொகுதியில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள பொதுமக்கள் குறைகள் தொடர்பான கோரிக்கைகளை மனுவான எழுதி மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து வழங்கினார். அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நிலம் எடுப்பு செய்யும்போது நிலங்களுக்கு தொழில் நிறுவன சட்டத்தின் படி நிலங்களை கையகப்படுத்துவதோடு, பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மேலும் குழு அமைத்து குறைகேட்பு கூட்டங்களை நடத்தி பொதுமக்கள், விவசாயிகள் குறைகளை தீர்க்க வேண்டும். நெய்வேலி தொகுதியை தனி தாலுகா, தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும். வரிசாங்குப்பம், புதுப்பாளையம், கீழ்மாம்பட்டு, கொட்டி, கோணான்குப்பம், விசூர் பாலம் பகுதிகளில் தடுப்பணையும், வெங்கடாம்பேட்டை சந்தை தோப்பு அருகில் தடுப்பு சுவர், வீரசிங்கன் குப்பம் பகுதியில் புதிய குளம், கீழ் மாம்பட்டு கானாங்குப்பம் இடையே உயர் மட்ட பாலம், பண்ருட்டி பகுதிகளில் விளையும் பலாப்பழம், முந்திரி பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய தொழிற்சாலை அமைக்கவேண்டும். இதுதவிர விசூர் ஏரி, சிறுவத்தூர் ஏரி, எலந்தம்பட்டு ஏரி, திருவாமூர் ஏரி, வெங்கடாம்பேட்டை ஏரி, அன்னதானம் பேட்டை ஏரி ஆகியவற்றை தூர் வாருவதோடு, பண்ருட்டி தாலூகா காடாம்புலியூரில் தொழிற்பேட்டை விரைந்து அமைத்து தர வேண்டும். இந்திரா நகர் மாற்று குடியிருப்பு பகுதி மற்றும் தாயகம் திரும்பியோர் வசிக்கும் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, கீழ்காங்கேயன் குப்பம், மதனகோபாலபுரத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு மேற்கண்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.