காவிரி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி
குமாரபாளையத்தில் குளிக்க சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
குமாரபாளையம்
நண்பர்கள்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் 31-வது வார்டு ஓடக்கரையை சேர்ந்தவர் சுகுமார். விசைத்தறி தொழிலாளி. இவரது மகன் தனுஷ் (வயது 17). பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் கனிஷ்கராஜ் (18) பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் நண்பர்களான தனுஷ், கனிஷ்கராஜ் ஆகிய இருவரும் குமாரபாளையம் பழைய பாலம் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர். அங்கு கனிஷ்கராஜுக்கு நீச்சல் தெரியாததால் அவருக்கு தனுஷ் நீச்சல் பயிற்சி அளித்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக கனிஷ்கராஜ் ஆற்றில் மூழ்கி விட்டார். பின்னர் அவரை காப்பாற்ற சென்ற தனுசும் நீரில் மூழ்கினார்.
உடல்கள் மீட்பு
இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் குமாரபாளையம் போலீஸ் நிலையம் மற்றும் குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு நிலைய வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் ஆற்றில் மூழ்கிய தனுஷ், கனிஷ்கராஜ் ஆகியோரை தேடினர். நீண்டநேர தேடுதலுக்கு பிறகு அவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.