'ஓ.பன்னீர்செல்வம் கூட்டுவது பொய்க்குழு' முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்


ஓ.பன்னீர்செல்வம் கூட்டுவது பொய்க்குழு  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடல்
x

‘ஓ.பன்னீ்ர்செல்வம் கூட்டுவது பொதுக்குழு அல்ல பொய்க்குழு’ என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடி உள்ளார்.

நாமக்கல்

குமாரபாளையம்

பொய்க்குழு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அ.தி.மு.க. தொண்டர் ஒருவரின் திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வம் ஆரம்பத்தில் இருந்தே சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோரோடு தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டு தான் வந்துள்ளார். அவர் தினகரனை சந்திப்பது ஒன்றும் புதிதில்லை. அ.தி.மு.க.வில் 99 சதவீதம் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டு உள்ளனர். இன்றைக்கு கட்சி வலுவாக இருக்கிறது.

1 சதவீதம் கூட தொண்டர்கள் இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எப்படி பொதுக்குழுவை நடத்த முடியும். அது பொதுக்குழு அல்ல. பொய்க்குழு. அவர் கம்பெனிக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்து இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வத்திடம் கட்சி இல்லை. அது நிறுவனம். இன்றைக்கு கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களுக்கு பொறுப்பு கொடுத்து கேலிக்கூத்து செய்து வருகிறார்.

அ.தி.மு.க. திட்டங்கள் முடக்கம்

தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தி.மு.க.விடம் கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட வரலாம். ஏன் என்றால் தி.மு.க. மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மின் கட்டணம், சொத்து வரி, பால் விலை உயர்வு உள்ளிட்டவைகள் மக்களை கடுமையாக பாதித்து உள்ளது. மேலும் தி.மு.க. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து என கூறி தி.மு.க. அரசு மாணவர்களை ஏமாற்றி வருகிறது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முடக்குவதை தவிர இந்த அரசு வேறு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. தி.மு.க.வை பொறுத்தவரையில் எந்த ஒரு திட்டத்தையும் ஆதாயம் இல்லாமல் செய்யாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story