பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி
ரசாயன தொழிற்சாலையில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் திருமலை கெமிக்கல்ஸ் தனியார் ரசாயன தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டால் அதனை பாதுகாப்பாக கையாள்வது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் இணைந்து நடத்திய ஒத்திகை நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ரசாயன தொழிற்சாலையில் எதிர்பாராதவிதமாக விஷவாயு கசிவு ஏற்பட்டால் அங்கு பணியாற்றும் நபர்களை பாதுகாப்பாக மீட்டு அவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்தும், விபத்து ஏற்பட்ட இடத்தில் மேலும் விபத்து ஏற்படாமல் தடுப்பது குறித்தும் ஊழியர்கள் முன்னிலையில் தத்ரூபமாக செய்து காட்டினர். இந்த நிகழ்ச்சியில், சுகாதரத் துறை, வருவாய்த் துறையினர், தீயணைப்பு துறை, ரசாயன துறை, மாசுகட்டுப்பாட்டு துறையினர் என பலதுறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.