ராமேசுவரத்தில் காவி புலிப்படை நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்


ராமேசுவரத்தில் காவி புலிப்படை நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்
x

கச்சத்தீவில் தேசிய கொடியேற்ற அனுமதி கோரி ராமேசுவரத்தில் காவி புலிப்படை நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

கச்சச்தீவை உடனடியாக மீட்க வலியுறுத்தியும், அதை சுற்றி உள்ள கடல் பகுதியில் இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்தியாவுக்கு சொந்தமான கச்சதீவில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக நேற்று காவி புலிப்படை நிறுவன தலைவர் புலவஞ்சி போஸ் தலைமையில் நிர்வாகிகள் ராமேசுவரத்தில் திரண்டனர். அகில இந்திய இந்து சத்திய சேனா நிறுவனத்தலைவர் வசந்தகுமார், ஹரி, மாநில மகளிர் அணி தலைவி நீலமணி மற்றும் நிர்வாகிகள் இளையராஜா, மணி, நந்து, தினேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கோவிலின் மேற்கு வாசல் அருகே உள்ள மருது சகோதரர்கள் சிலை முன்பிருந்து கையில் தேசிய கொடியுடன் அக்னி தீர்த்த கடற்கரை நோக்கி ஊர்வலமாக வந்தனர். கடலில் இறங்கி போராட்டம் நடத்த முயன்ற இந்த அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். கடலில் இறங்கி போராட்டம் நடத்துவதற்கோ கச்சத்தீவு செல்வதற்கோ அனுமதி கிடையாது எனவும் தெரிவித்தனர். அதை தொடர்ந்து இந்து அமைப்பினர் இலங்கை கடற்படையை கண்டித்து கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து போலீசார் அனுமதி இல்லாமல் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 30 பேரை கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர் பின்னர் மாலை 6 மணிக்கு பிறகு அனைவரையும் விடுதலை செய்தனர். குடியரசு தின நாளில் கச்சத்தீவில் தேசியக்கொடி ஏற்ற முயன்றதாக தேசியகொடியுடன் அக்னி தீர்த்த கடலில் இறங்கி போராட்டம் நடத்த முயன்ற சம்பவம் சிறிது நேரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story