கடலூரை வந்தடைந்த பாய்மரப்படகு சாகச பயணம்


கடலூரை வந்தடைந்த பாய்மரப்படகு சாகச பயணம்
x
தினத்தந்தி 14 Jun 2023 12:15 AM IST (Updated: 14 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் போலீஸ் பொன்விழாவை முன்னிட்டு, பெண் போலீசார் மேற்கொண்டுள்ள பாய்மரப்படகு சாகச பயணத்தினர், கடலூருக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து அவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் வாழ்த்து தெரிவித்து மேற்கொண்டு பயணத்தை தொடங்கி வைத்தார்

கடலூர்

கடலூர் முதுநகர்

கோடியக்கரை நோக்கி பயணம்

தமிழகத்தில் மகளிர் காவல் துறை பிரிவு தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த பொன்விழாவை கொண்டாடும் வகையில் மகளிர் போலீசார், கடந்த 10-ந்தேதி சென்னையில் இருந்து கடல் வழியாக புதுச்சேரி மார்க்கமாக பாய்மரப்படகு சாகச பயணத்தை தொடங்கினார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் நீலாதேவி தலைமையில் 25 பெண் போலீசார் 4 பாய்மரப்படகில் பயணத்தை தொடங்கினர். இவர்கள் பாய்மரப் படகில் கோடியக்கரை வரை சென்று மீண்டும் சென்னைக்கு 17-ந்தேதி திரும்ப திட்டமிட்டுள்ளனர். அதாவது சுமார் 1000 கிலோ மீட்டர் பாய் மர படகு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். இதன் மூலம், உலக அளவில் கடலில் மகளிர் போலீசார் மேற்கொள்ளும் பயணமாக கருதப்படுகிறது.

கடலூர் வந்தடைந்தனர்

இந்த நிலையில் சென்னையில் இருந்து கடந்த 10-ந்தேதி பயணத்தை தொடங்கியவர்கள், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் கடலூர் துறைமுகம் பகுதியை வந்தடைந்தனர். பின்னர் இரவில் துறைமுக பகுதியில் ஓய்வெடுத்த அவர்கள், நேற்று காலை மீண்டும் தங்களது பயணத்தை தொடங்கினார்கள்.

கடல் பகுதிக்கு படகில் சென்ற கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், சாகச பயணம் மேற்கொண்டுள்ள போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்து, மேற்கொண்டு அவர்களது பயணத்தை கொடியசைத்து, தொடங்கி வைத்தார்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, இந்திய கடலோர காவல் படை கமாண்டர் அஜய் குமார், இன்ஸ்பெக்டர் உதயகுமார், கடலோர காவல் படை கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பத்மா உள்பட பலர் உடனிருந்தனர்.

கடல் காற்று

முன்னதாக பாய்மர படகுகள் கடலூர் துறைமுக பகுதிக்கு வருவதாக இருந்தது. ஆனால் கடல் காற்று திசை மாறி இருந்ததால், பாய்மரப்படகுகள் கடலூர் துறைமுகத்திற்குள் வர முடியாத நிலை ஏற்பட்டது. இதை அடுத்து, கடலோர காவல் படைக்கு சொந்தமான படகில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் அதிகாரிகள் முகத்துவாரம் அருகே கடல் பகுதிக்கு சென்று கொடி அசைத்து பாய்மரப்படகு சாகச பயணத்தை தொடங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story