தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சைமா) 67-வது மகாசபை பொதுக்குழு கூட்டம்
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சைமா) 67-வது மகாசபை பொதுக்குழு கூட்டம்
திருப்பூர்
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சைமா) 67-வது மகாசபை பொதுக்குழு கூட்டம் சங்க அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மேலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கி கூட்டத்தை தொடங்கிவைத்தார். பொதுச்செயலாளர் கோவிந்தப்பன் செயல் அறிக்கையை வாசித்தார். பொருளாளர் ரமேஷ்குமார் வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். துணைத்தலைவர் பாலச்சந்தர், இணை செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பனியன் தொழில் வளர்ச்சி, திருப்பூர் வளர்ச்சியில் சைமா சங்கத்தின் பங்களிப்பு, தொழில் நிலவரம், பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு, வங்கதேச ஆடை இறக்குமதி உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள்.
தலைவர் ஈஸ்வரன் பேசும்போது, 'பனியன் தொழிலுக்கு அவ்வப்போது சோதனைகளும், சவால்களும் ஏற்படுகிறது. அதை எப்படியும் போராடி வெற்றிக்கொண்டு வருகிறோம். மூலப்பொருளான பஞ்சு, நூல் விலையை நிலையாக இருக்கச்செய்து பனியன் தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்' என்றார்.
சங்கத்தின் செயல்பாடுகள், நிர்வாக குழு வசதிக்காக புதிய இணையதளம் தொடங்குவது குறித்து துணை தலைவர் பாலசந்தர் விளக்கி கூறினார். பின்னர் புதிய இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டது. அபரிமிதமான மின்கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. தமிழக அரசு மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். தொழில் முனைவோர் அறியாமை காரணமாக செய்யும் சிறிய தவறுகளுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்காமல் குறைவாக அபராதம் நிர்ணயம் செய்ய ஜி.எஸ்.டி. அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.