புனித சந்தியாகப்பர் ஆலய தேர் பவனி
தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி நேற்று நடந்தது. இதில் மும்மதத்தினர் கலந்து கொண்டனர்.
ராமேசுவரம்,
தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி நேற்று நடந்தது. இதில் மும்மதத்தினர் கலந்து கொண்டனர்.
புனித சந்தியாகப்பர் ஆலயம்
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் புனித சந்தியாகப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 480-ம் ஆண்டு பெருவிழா கடந்த 16-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றன.
இந்த நிலையில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு தேர் பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மாலை 6 மணிக்கு மதுரை வட்டார அதிபர் ஆனந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
தேர்பவனி
நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி, ராமேசுவரம் நகராட்சி தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி, முன்னாள் நகர்மன்ற தலைவர் அர்ஜூனன், ஆலய பங்குத்தந்தை செபாஸ்டின் மற்றும் பங்குத்தந்தைகள் பாம்பன் ஜேசு ஜெயராஜ், மண்டபம் ஜான் ராபர்ட், ராமேசுவரம் தேவசகாயம், தென்குடா சுந்தர்ராஜ் அருள்ராஜ், மற்றும் விழா குழு தலைவர் ஜேம்ஸ் அமல்ராஜ், அரியாங்குண்டு கிராமத்தலைவர் சந்தியாதாஸ், தென்கூடா கிராமத் தலைவர் அந்தோணி சந்தியாகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பலி முடிந்த பின்னர் ஆலயத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சந்தியாகப்பரின் சொரூபம் வைக்கப்பட்டது. மின்னொளி தேர் ஆலயத்தைச் சுற்றி வலம் வந்தது. தேர்பவனி நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் திரளாக கலந்து கொண்டனர். திருவிழாவில் இன்று(திங்கட்கிழமை) மாலை கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெறுகின்றது.