'கோவில் பணி என்பது கடவுள் கொடுத்த வரம்'


கோவில் பணி என்பது கடவுள் கொடுத்த வரம்
x
தினத்தந்தி 16 July 2023 5:00 PM GMT (Updated: 17 July 2023 10:30 AM GMT)

'கோவில் பணி என்பது கடவுள் கொடுத்த வரம்' என்று அவினாசி லிங்கேசுவரர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சக்திவேல் பேசினார்.

திருப்பூர்

அறங்காவலர் குழு முதல் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்ற ஸ்ரீகருணாம்பிகை உடனமர்அவினாசி லிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு புதிதாக அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டது. இதை அடுத்து நேற்று அவினாசி லிங்கேசுவரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் டாக்டர் ஆ.சக்திவேல், பொன்னுசாமி, ரவி, பிரகாஷ், ஆறுமுகம், கார்த்திகா ஆகியோர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதை அடுத்து அறங்காவலர் குழு முதல் கூட்டம் கோவில் செயல் அலுவலகத்தில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் தலைமையில் நடந்தது. கோவில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டி முன்னிலை வகித்தார். இதில் அறங்காவலர்கள் கலந்துகொண்டனர்.

கடவுள் கொடுத்த வரம்

இதையடுத்து அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் பேசியதாவது:-

இதே கோவிலில் சேவை செய்ய கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்போது மீண்டும் அந்தப்பணி தொடர என்னை கடவுள் பணித்துள்ளார். கோவில் சேவை செய்வது என்பது கடவுள் கொடுத்த வரம். கோவில் பணி சம்பந்தமாக இரவு 11 மணிக்கு கூட என்னுடன் தொடர்பு கொள்ளலாம்.

கோவில் நுழைவுவாயில் முன்புறம் அலங்கார நுழைவு வாயில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. எனவே உபயதாரர்களை சந்தித்து கோவில் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். என்றார்.

கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ரா.செந்தில்குமார், மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story