ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசாணைப்படி ஊதியம்
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசாணைப்படி ஊதியம்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அரசாணைப்படி ஊதியம் வழங்க வேண்டும் என்று முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தொழிலாளர் உதவி ஆணையாளர் செந்தில்குமார் அறிவுறுத்தினார்.
6 நகராட்சிகள்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கயம், வெள்ளகோவில், திருமுருகன்பூண்டி ஆகிய 6 நகராட்சிகளில் தூய்மைப்பணி ஒப்பந்த முறையில் தனியாருக்கு ஒப்படைத்த பிறகு தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ரூ.380 மட்டுமே வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள குறைந்தபட்ச ஊதிய அரசாணைப்படி தூய்மைப்பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.572, குடிநீர் பணியாளர்களுக்கு ரூ.648, ஓட்டுனர்களுக்கு ரூ.687 வீதம் வழங்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி திருப்பூர் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் 25-ந் தேதி (நேற்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.
முத்தரப்பு பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து தூய்மைப்பணியாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக சி.ஐ.டி.யு. சங்கத்தினர் மற்றும் நகராட்சி ஆணையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த திருப்பூர் தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் செந்தில்குமார் அழைப்பு விடுத்தார்.
அதன்படி நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் உதவி ஆணையாளர் செந்தில்குமார் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. சி.ஐ.டி.யு. தரப்பில் மாவட்ட செயலாளர் ரங்கராஜ், துணைத்தலைவர் உன்னிகிருஷ்ணன், திருமுருகன்பூண்டி கவுன்சிலர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்று, அரசாணைப்படி ஊதியம் வழங்க வலியுறுத்தினார்கள். நகராட்சிகளின் ஆணையாளர்கள், சுகாதார அதிகாரிகள் பங்கேற்றனர். இதுகுறித்து நிர்வாக தரப்பில் பேசி நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையாளர்கள் தெரிவித்தனர்.
3-ந்தேதி பேச்சுவார்த்தை
இருதரப்பினரிடம் விசாரணை நடத்திய உதவி ஆணையாளர் செந்தில்குமார், அரசாணைப்படி நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை தொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய ஊதியம் வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வருகிற 3-ந் தேதி நடைபெறும் என்று கூறினார்.
----