கார் மீது லாரி மோதி 6 பேர் காயம்
சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பியபோது கார் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர்.
விபத்து
காரைக்கால் மேலே ஓடுகரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(வயது 44). பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் விடுமுறையை கொண்டாட தனது குடும்பத்தினர் மற்றும் தனது நண்பருடன் வெளியூர் சென்றுள்ளார். பின்னர் மேட்டுப்பாளையத்தில் இருந்து தனது ஊருக்கு செல்வதற்காக அனைவரும் காரில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்று கொண்டு இருந்தனர். திருச்சி- கரூர் புறவழி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை அருகே உள்ள கீழவதியம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது.
6 பேர் காயம்
இதில் இரண்டு வாகனங்களும் சேதம் அடைந்ததோடு காரில் பயணம் செய்த ராஜா, அவரது மனைவி வேனி(27), மகள் நித்யஸ்ரீ(9), மகன் நித்தீஸ்வரர்(7), நண்பரான சுந்தர்(43), உறவினரான சந்தியா(23) ஆகிய 6 பேரும் காயமடைந்தனர். இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் படுகாயம் அடைந்த சந்தியா மட்டும் மேல் சிகிச்சைக்காக மாயவரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ராஜா அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.