பொரி விற்பனை அமோகம்


பொரி விற்பனை அமோகம்
x

பரமத்திவேலூரில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகையை முன்னிட்டு பொரி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

மூட்டை ஒன்று ரூ.550

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொரி தயார் செய்யப்பட்டாலும், பரமத்தி மற்றும் வேலூர் பகுதியில் தயார் செய்யப்படும் பொரிக்கு மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு அதிகம். பொரி தயாரிப்பதற்கான நெல் கர்நாடக மாநிலத்தில் இருந்து வாங்கி வந்து பின் அதை ஊறவைத்து அரிசியாக எடுத்து பொரி தயார் செய்கிறார்கள். தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வியாபாரிகளே பொரி தயாரிப்பதற்கான அரிசியை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். அந்த அரிசியை ஊற வைத்து, உப்பு சேர்த்து வறுத்த பின் பொரி தயாரிக்கும் அரிசியை மணலில் போட்டு பாரம்பரிய முறையில் பொரி தயார் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு 50 கிலோ கொண்ட பொரி தயாரிக்கும் அரிசி சிப்பம் ஒன்று ரூ.2 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. ஆனால் தற்போது 50 கிலோ கொண்ட சிப்பம் அரிசி ரூ.3 ஆயிரத்திற்கு மேல் விற்பனையாவதாக பொரி வியாபாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த ஆண்டு 50 பக்கா கொண்ட பொரி மூட்டை ஒன்று ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது 50 பக்கா கொண்ட பொரி மூட்டை ஒன்று ரூ.550 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விற்பனை விறுவிறுப்பு

ஆயுத பூஜை பண்டிகை நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ள நிலையில் பொரி விற்பனை தற்போது அமோகமாக உள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டைக் காட்டிலும், தற்போது பொரியின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. மற்ற பகுதிகளில் தயார் செய்யப்படும் பொரியைக் காட்டிலும் பரமத்தி பகுதியில் தயாராகும் பொரியின் சுவையும், மொறுமொறுப்பு தன்மையுடனும் இருப்பதால் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொரிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. பரமத்திவேலூர் பகுதியில் தயார் செய்யப்படும் பொரிக்கு பொதுமக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருப்பதாக பொரி தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story