பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அத்தியூர் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அத்தியூர் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
ரிஷிவந்தியம்,
வாரச்சந்தை
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே அத்தியூர் கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், தியாகதுருகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் தாங்கள் வளர்க்கும் ஆடுகள், மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து செல்வார்கள். ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் இ்ந்த வாரச்சந்தையில் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனையாகும்.
ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
இந்தநிலையில் நாளை (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் நேற்று நடந்த அத்தியூர் வாரச்சந்தைக்கு ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. இதனை கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, புதுச்சேரி, சென்னை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும், சுற்றுப்பகுதிகளில் இருந்து வந்த மொத்த, சிறு வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி, வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். ஆடு ஒன்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலை போனது. நேற்று நடந்த சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.