பக்ரீத் பண்டிகையையொட்டி மேலப்பாளையம் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை


பக்ரீத் பண்டிகையையொட்டி  மேலப்பாளையம் சந்தையில்  ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x

பக்ரீத் பண்டிகையையொட்டி மேலப்பாளையம் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது

திருநெல்வேலி

பக்ரீத் பண்டிகையையொட்டி மேலப்பாளையம் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

மேலப்பாளையம் சந்தை

தமிழகத்தில் உள்ள ஆட்டுச்சந்தைகளில் எட்டயபுரம், மணப்பாறை, ரெட்டியார்பட்டி, முக்கூடல், மேலப்பாளையம் ஆகியவை பெரிய சந்தைகளாகும். இந்த சந்தைகளில் ஆடுகளின் விற்பனை அதிக அளவில் நடைபெறும்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரிய சந்தையான மேலப்பாளையம் ஆட்டுச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும்.

ரூ.3 கோடிக்கு விற்பனை

அதன்படி நேற்று ஆட்டுச்சந்தை நடைபெற்றது. பக்ரீத் பண்டிகையையொட்டி மேலப்பாளையம் சந்தைக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான ஆடுகள் வந்து இருந்தன. ரூ.5 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

ஆனாலும் விலையை பொருட்படுத்தாமல் ஆடுகளின் தரம், எடை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆடுகளை பொதுமக்கள், வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் மேலப்பாளையம் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகி இருக்கும் என்று வியாபாரிகள் கூறினார்கள்.

போக்குவரத்து நெருக்கடி

தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வள்ளியூர், ஆலங்குளம், கன்னியாகுமரி, காயல்பட்டினம், ரகுமானியாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள் ஆடுகளை வாங்கி லோடு ஆட்டோக்களில் ஏற்றிச் சென்றனர்.

சிலர் தங்களுடைய கார்களிலும், மோட்டார் சைக்கிளிலும் ஆடுகளை கொண்டு சென்றனர். இதனால் மேலப்பாளையம் சந்தை பகுதியில் நேற்று போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.


Next Story