ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பொங்கல் பண்டிகையையொட்டி நாமக்கல்லில் நேற்று சுமார் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
வாரச்சந்தை
நாமக்கல்லில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இச்சந்தைக்கு நாமக்கல், புதன்சந்தை, சேந்தமங்கலம், ராசிபுரம், எருமப்பட்டி, வலையப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
இங்கே விற்பனைக்காக கொண்டு வரும் ஆடுகள் மிகுந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வரும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.
ரூ.3 கோடி
இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் ஆடுகள் சந்தை நடைப்பெற்றது. அதில் நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என அதிக அளவு விற்பனைக்கு வந்திருந்தது. குறிப்பாக பொங்கல் பண்டிகையையொட்டி கரிநாள் வர இருப்பதால் சந்தையில் இறைச்சிக்காக அதிகளவு ஆடுகள் விற்பனையானது.
ஒரு ஜோடி ஆடு குறைந்தபட்சம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.45 ஆயிரம் வரை விலை போனது. ஆட்டுக் குட்டியானது ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. ஆடுகள் நல்ல விலை போனதால் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று ஒரே நாளில் இந்த சந்தையில் சுமார் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.