ஆடுகள் விற்பனை களைகட்டியது


ஆடுகள் விற்பனை களைகட்டியது
x

கோவையில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை களைகட்டியது. ஒரு ஆடு ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது.

கோயம்புத்தூர்


கோவையில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை களைகட்டியது. ஒரு ஆடு ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது.

பக்ரீத் பண்டிகை

முஸ்லிம் மக்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் வருகிற 10-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பது வழக்கம். பக்ரீத் தொழுகை முடிந்து இந்த கடமையை நிறைவேற்றுவார்கள். அடுத்து வரும் 3 நாட்களான 13-ந்தேதி வரை குர்பானி கொடுக்கலாம்.

கோவையில் குர்பானிக்காக ஆடு வாங்குவதற்காக உக்கடம் பொன்விழா நகர் மற்றும் போத்தனூர் உள்பட பல பகுதிகளில் தற்காலிக ஆட்டு சந்தை நடைபெறுகிறது.

இதையொட்டி கரூர், நாமக்கல், கன்னிவாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செம்மறி ஆடு, நாட்டு ஆடு உள்ளிட்டவற்றை மொத்தமாக வாங்கி கோவையில் விற்பனை செய்கிறார்கள்.

ரூ.25 ஆயிரத்துக்கு விற்பனை

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

செம்மறி ஆடு உயிருடன் கிலோ ரூ.450, நாட்டு ஆடு உயிருடன் கிலோ ரூ.420 என்ற விலையில் விற்பனை செய்து வருகிறோம். பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆடுகளும் விற்பனை செய்யப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த வால்குரும்ப இன ஆடுகள் சில பண்ணைகளில் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 75 கிலோ வரை இதன் எடையுள்ளது. பெரிய அளவிலான ஒரு ஆடு ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் வியாபாரம் மேலும் களைகட்டும் என்று எதிர்பார்க்கிறோம். கோவையில் பெரிய அளவிலான மொத்த சந்தை இல்லாவிட்டாலும் வெளியூர்களில் இருந்து வாங்கி வேன்களில் ஏற்றிகொண்டு வந்து மொத்தமாகவும், தனித்தனியாகவும் விற்பனை செய்து வருகிறார்கள். நகரம் முழுவதும் லட்சக்கணக்கான மதிப்புக்கு ஆடு விற்பனை நடைபெறுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தீவன விற்பனை

ஆடு விற்பனை ஒரு பகுதியில் நடைபெறும்போது, ஆடுகளை வாங்கிச்செல்பவர்கள் வீடுகளில் கட்டிப்போட்டு தீவனம் போடுவது வழக்கம். இதனால் பசும்புல் உள்ளிட்ட தீவன விற்பனைகளும் ஆட்டு சந்தை பகுதியில் நடைபெறுகிறது.


Next Story