மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்
ஆடி மாத கோவில் கொடை விழாவையொட்டி மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது.
மேலப்பாளையத்தில் உள்ள கால்நடை சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஆடு, கோழி, கருவாடு உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். தற்போது ஆடி மாதம் என்பதால் ஏராளமான கிராமங்களில் கோவில் கொடை விழா நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்ற ஆடுகளை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.
இதையொட்டி நேற்று மேலப்பாளையம் சந்தைக்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. ஒரு ஆடு விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் புதுவரவாக கராச்சி ஆடுகள் விற்பனைக்கு வந்தன. 30 கிலோ எடை கொண்ட அந்த வகை ஆடு ரூ.19 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.
செங்கிடா, கருங்கிடா உள்ளிட்டவைகளும் சந்தைக்கு வந்திருந்தன. கொம்பு அதிக நீளம் கொண்ட செங்கிடா ரூ.23 ஆயிரம் முதல் ரூ.26 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.