நிலுவையில் இருந்த கடனை தெரிவிக்காமல் ஏலத்தில் வீடு விற்பனை: டெபாசிட் தொகை ரூ.29 லட்சத்தை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்- தேசிய வங்கிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
நிலுவையில் இருந்த கடனை தெரிவிக்காமல் ஏலத்தில் வீடு விற்பனை செய்த டெபாசிட் தொகை ரூ.29 லட்சத்தை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்று தேசிய வங்கிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
மதுரையைச் சேர்ந்த தங்கம்ஸ்ரீ, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தேசிய வங்கி ஒன்று கடந்த பிப்ரவரி மாதம் கடன் தொகைக்காக ஒரு வீட்டை ஏலத்தில் விற்பதாக அறிவித்தது. இந்த ஏலத்தில் நான் பங்கேற்றேன். அந்த வீட்டின் மதிப்பு ரூ.1 கோடியே 17 லட்சம் என தெரிவித்தனர். இதற்காக முன்பணமாக ரூ.11 லட்சத்து 52 ஆயிரம் செலுத்தினேன். அந்த வீட்டை ஏலத்தில் எனக்கு வழங்கினர். மொத்த தொகையில் 25 சதவீத தொகையை செலுத்தி இருந்தேன். மீதமுள்ள 75 சதவீத தொகையை செலுத்துவதற்கு வங்கி தரப்பில் அவகாசம் அளித்தனர். இதற்கிடையே அந்த சொத்து குறித்த ஆவணங்களை பதிவுத்துறையிடம் சரிபார்த்தோம். அப்போது அந்த வீட்டின் பேரில் தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.32 லட்சம் கடன் வாங்கி இருந்தது தெரியவந்தது. இதுபற்றி வங்கி நிர்வாகிகளிடம் கேட்டேன். அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை. இதனால் நான் செலுத்திய தொகையை திருப்பி தருமாறு கேட்டதற்கு, முடியாது என்று கூறினர். சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கும் முறையான பதில் இல்லை. எனவே உரிய தகவல்களை தெரிவிக்காமல் என்னிடம் பெற்ற தொகையை வட்டியுடன் திருப்பி தர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆயிரம் கே.செல்வகுமார் ஆஜராகி, வீட்டிற்கான தொகையையும், வீட்டின் உரிமையாளர் ஏற்கனவே வாங்கியிருந்த கடனையும் மனுதாரர் தலையில் சுமத்துவது சட்டவிரோதம். வங்கி தரப்பில் ஏற்கனவே வீட்டின் மீது கடன் இருப்பது தெரியாது என்ற பதில் ஏற்புடையதல்ல என்று வாதாடினார். விசாரணை முடிவில், இதுதொடர்பாக வங்கி பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. மனுதாரர் செலுத்திய ரூ.29 லட்சத்து 31 ஆயிரத்து 568-ஐ 6 சதவீத வட்டியுடன் அவர் டெபாசிட் செய்த நாள் முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.