சேலத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி-கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்
சேலத்தில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.
மாரத்தான் போட்டி
எய்ட்ஸ் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தாண்டு 'இளைஞர் திருவிழா-2023-23" என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.
அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கிய இந்த போட்டியை கலெக்டர் கார்மேகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 5 கிலோ மீட்டர் கொண்ட இந்த ஓட்டம் மாணவர்கள், மாணவிகளுக்கு என்று தனித்தனியாக நடத்தப்பட்டது.
இதில் 611 பேர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டி மத்திய சிறை, டி.ஐ.ஜி. அலுவலகம், அஸ்தம்பட்டி மாநகராட்சி அலுவலகம் வழியாக மீண்டும் ரவுண்டானாவை வந்தடைந்தது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான மாரத்தான் போட்டிக்கு தேர்வாகினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் அருணாசலம், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் சவுண்டம்மாள் (சேலம்), ஜெமினி (ஆத்தூர்), காசநோய் பிரிவு துணை இயக்குனர் கணபதி மற்றும் செஞ்சுருள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இளைஞர் திருவிழாவையொட்டி தினமும் எய்ட்ஸ் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.