சேலம் மாநகராட்சியில் வரி விதிப்பு, மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு


சேலம் மாநகராட்சியில் வரி விதிப்பு, மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு
x

சேலம் மாநகராட்சியில் வரி விதிப்பு, மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

சேலம்

மறைமுக தேர்தல்

சேலம் மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்ட அரங்கில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆணையின்படி வரி விதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் பதவி இடத்திற்கான மறைமுக தேர்தல் நேற்று ஆணையாளர் பாலச்சந்தர் முன்னிலையில் நடைபெற்றது.

மாநகராட்சியில் 60 கவுன்சிலர்களில் 9 கவுன்சிலர்கள் மட்டும் வரிவிதிப்பு மற்றும் மேல்முறையீட்டு குழு உறுப்பினர் பதவிக்கு மனு அளித்தனர். இவர்களுக்கு எதிராக யாரும் மனு அளிக்காத காரணத்தினால் வரி விதிப்பு மற்றும் மேல்முறையீட்டு உறுப்பினர்களாக போட்டியின்றி அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சான்றிதழ்

அதன்படி கவுன்சிலர்கள் குமரவேல், தெய்வலிங்கம், சங்கீதா, சாந்தமூர்த்தி, சவிதா, பவுமிகா தப்சிரா, புனிதா, பழனிசாமி, கனிமொழி ஆகிய 9 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான சான்றிதழை அவர்களுக்கு மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் சாரதாதேவி, மண்டல குழுத்தலைவர்கள் கலையமுதன், தனசேகர், அசோகன், துணை ஆணையாளர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஆணையாளர் பாலச்சந்தர் கூறும் போது, மாநகராட்சியில் வரி விதிப்பு, மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக 9 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவுக்கு தலைவராக மேயர் இருப்பார். மேலும் இந்த குழுவில் அதிகாரிகள், அலுவலர்கள் உள்பட 19 பேர் இடம்பெறுவர். இந்த குழுவினர் வரி விதிப்பு மேல் முறையீட்டு விண்ணப்பங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பர். இந்த மனுக்கள் மீது உடனுக்குடன் ஆய்வு செய்து விரைந்து முடித்து வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story