விபத்தில் மூளைச்சாவு அடைந்த சேலம் என்ஜினீயரின் உடல் உறுப்புகள் தானம் சென்னை, கோவைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது


விபத்தில் மூளைச்சாவு அடைந்த  சேலம் என்ஜினீயரின் உடல் உறுப்புகள் தானம்  சென்னை, கோவைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது
x

சேலத்தில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த என்ஜினீயரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது உடல் உறுப்புகள் பாதுகாப்பாக சென்னை, கோவைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டன.

சேலம்

சேலம்,

மூளைச்சாவு அடைந்த என்ஜினீயர்

சேலம் அம்மாபேட்டை காமராஜ் நகர் காலனியை சேர்ந்தவர் அழகிரி. இவரது மகன் பிரசாந்த் (வயது 35). பி.இ. என்ஜினீயரிங் முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 9-ந் தேதி இரவு பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் அம்மாபேட்டையில் உள்ள உழவர் சந்தை அருகே சென்றார்.

அப்போதுமோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பிரசாந்த் கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்கள் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பிரசாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் திடீரென அவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

உடல் உறுப்புகள் தானம்

இதனால் பிரசாந்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அவர்கள் தங்களது விருப்பத்தை சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளிசத்தியமூர்த்தியிடம் தெரிவித்தனர். நேற்று மாலை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசாந்தின் உடல் உறுப்புகளை எடுக்கும் பணியில் டாக்டர்கள் ஈடுபட்டனர். பின்னர் அவரது சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், இதயம் ஆகிய உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை மற்றும் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கிவிடாமல் இருக்க அதற்கு முன்பாக மாநகர போலீசாரும் ஜீப்பில் உடன் சென்றனர். மூளைச்சாவு அடைந்த பிரசாந்தின் தாய் மற்றும் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டனர். அவருக்கு பிரபாகரன், சக்திவேல் ஆகிய 2 சகோதர்களும், சங்கீதா என்ற அக்காளும் உள்ளனர். இதனால் மூளைச்சாவு அடைந்த பிரசாந்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த அவரது குடும்பத்தினரை ஆஸ்பத்திரி டாக்டர்களும், உறவினர்களும் ஆறுதல் கூறினர்.


Next Story